அமைச்சர்கள் சமுகமளிக்காமை தொடர்பில் சபாநாயகர் கவலை

எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காது என உறுதிப்படுத்துமாறு அறிவிப்பு

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சபைக்கு சமுகமளிக்காமலிருந்தமை குறித்து கடும் வேதனையடைவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறமலிருக்க ஆளும் கட்சி பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) எதிர்க்கட்சியினரின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க அமைச்சர்கள் எவரும் சபைக்கு வந்திருக்கவில்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குத் தலைமை தாங்கியிருந்த பிரதி சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். பாராளுமன்ற வரலாற்றில் கறுப்பு நாள் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கூறியிருந்தார். இது தொடர்பில் நேற்றையதினம் ஊடகங்கள் பல அறிக்கையிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினம் தனது கவலையைத் தெரிவித்த சபாநாயகர், ஊடகங்களில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பது பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு இழுக்காக அமைந்துள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் பதிலளிக்க வராத விடயம் சபை முதல்வரினால் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த நான்கு வருடங்களில் பல தடவைகள் பதில் வழங்க அமைச்சர்கள் சபையில் இல்லாமை கவனம் செலுத்தப்பட்டிருந்தது என்றும் கூறினார்.

அதேநேரம், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலருடைய செயற்பாடுகள் கவலையடையும் வகையில் அமைந்தது என்றும், சபையில் உறுப்பினர்கள் ஒழுக்கமான முறையில் நடந்துகொள்வது அவசியமானது என்றும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

 

Sat, 09/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை