மியன்மாரில் துரத்தப்பட்ட ரொஹிங்கியர் கிராமங்களின் மீது அரசாங்க கட்டடங்கள்

மியன்மாரில் உள்ள ஒட்டுமொத்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்களும் அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் பாசறைகள், அரச கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இது பற்றிய உண்மைகளை பி.பி.சி தொலைக்காட்சி கண்டறிந்துள்ளது. அரச சுற்றுப்பயணம் ஒன்றில் ரொஹிங்கிய குடியிருப்புகள் என செய்மதி படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நான்கு இடங்களில் பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது. ரகினே மாநிலத்தின் கிராமங்களில் அந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் மியன்மாரில் இருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு “பாடப்புத்தக இன அழிப்பு” ஒன்றாக ஐ.நா இதனை வர்ணித்திருந்தது.

இன அழிப்பு அல்லது இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டை பெளத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மார் நிராகரிப்பதோடு சில அகதிகளை ஏற்பதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

எனினும் பங்களாதேஷ் அகதி முகாமில் இருந்து மியன்மார் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட 3,450 அகதிகளில் எவரும் முன்வராத நிலையில் கடந்த மாதம் அந்த முயற்சி இரண்டாவது தடவையாக தோல்வி அடைந்தது.

இதில் மினய்மார் திரும்பும் ரொஹிங்கிய அகதிகளுக்காக ஓர் ஆண்டுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட அகதி முகாம் மோசமான நிலையில் உள்ளதோடு அங்கிருக்கும் பொதுக் கழிப்பறை சேதமடைந்துள்ளது. 2017 வன்முறையில் அழிக்கப்பட்ட இரு ரொஹிங்கிய கராமங்களிலேயே இந்த முகாம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று ஜப்பான் மற்றும் இந்திய அரசுகளின் நிதியுதவியில் கட்டப்பட்டிருக்கும் அகதி முகாம் ஒன்றும் ரொஹிங்கிய கிராமம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டு அதற்கு மேல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Wed, 09/11/2019 - 06:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை