பிபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி

இலங்கை - துர்க்மெனிஸ்தான் இன்று மோதல்

இலங்கை கால்பந்து அணி, சுமார் 15 வருடங்களின் பின்னர் பிபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் இரண்டாம் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இன்று 5ஆம் திகதி துர்க்மெனிஸ்தான் அணியுடன் இடம்பெறும் முதலாவது போட்டியுடன் இலங்கை இந்த சுற்றை ஆரம்பிக்கின்றது. கொழும்பு குதிரை பந்தய திடல் மைதானத்தில் இடம்பெறுகிறது.

கட்டாரில் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிபா உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி மக்காவுடன் மோதியது. கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி மக்காவுவில் இடம்பெற்ற இதன் முதல் கட்டப் போட்டியில் இலங்கை அணி 1-- 0 என தோல்வியடைந்தது.

பின்னர், அதற்கு அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட போட்டிக்கு இலங்கையின் பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி மக்காவு அணி வரவில்லை.

எனவே, இலங்கை அணிக்கு வோக் ஓவர் முறையில் 3-0 என வெற்றி வழங்கப்பட, இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.

 

இலங்கை – துர்க்மெனிஸ்தான்

கடந்தகால மோதல்கள்

இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகள் கடந்த 15 வருடங்களாக ஒன்றை ஒன்று மோதியதில்லை. இறுதியாக 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியிலேயே மோதின.

துர்க்மெனிஸ்தானில் இடம்பெற்ற முதல் கட்ட போட்டியை 2-0 என இழந்த இலங்கை வீரர்கள், இலங்கையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட மோதலை 2-2 என சமநிலையில் முடித்தனர். எனினும், குறித்த போட்டியின் மொத்த முடிவுகளுக்கு அமைய துர்க்மெனிஸ்தான் 4-2 என வெற்றி பெற்றது.

 

இலங்கை – துர்க்மெனிஸ்தான்

இடையிலான இறுதி மோதல்கள்

2003 – AFC கிண்ண தகுதிகாண் :

துர்க்மெனிஸ்தான் 1 – 0 இலங்கை

2003 – AFC கிண்ண தகுதிகாண்:

துர்க்மெனிஸ்தான் 3 – 0 இலங்கை

2004 – உலகக் கிண்ண தகுதிகாண் :

துர்க்மெனிஸ்தான் 2 – 0 இலங்கை

2004 – உலகக் கிண்ண தகுதிகாண் :

இலங்கை 2 – 2 துர்க்மெனிஸ்தான்

 

இலங்கை அணி

புதிய பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் முழுமையான வழிநடாத்தலில் கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்றுவிக்கப்பட்டு வரும் இலங்கை அணி, பெரிய அளவிலான முன்னேற்றம் ஒன்றை எதிர்பார்த்தே இந்த முறை அதிகமாக இளம் வீரர்களின் உள்ளடக்கத்துடன் தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை அணியின் மிகப் பெரிய பலமாக உள்ளவர் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா. மாலைத்தீவுகளில் தொழில்முறை கால்பந்தில் ஆடும் இவருக்கு துர்க்மெனிஸ்தான் அணியுடனான மோதலில் பியூஸ்லசுடன் இணைந்து மிகப் பெரிய ஒரு பங்கை அணிக்காக வழங்க வேண்டி உள்ளது.

இலங்கை அணியின் மத்திய களத்தைப் பற்றி கூறும்போது, பயிற்றுவிப்பாளர் அண்மைய போட்டிகளில் தொடர்ச்சியாக பல மாற்றங்களை ஏற்படுத்தி, பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய களத்திற்காக பல இளம் வீரர்கள் போட்டி போடுகின்றனர். எனவே, இறுதி நேரம்வரை யார் களமிறக்கப்படுவார்கள் என்பது பக்கீர் அலியின் கைகளிலேயே உள்ளது. இலங்கை அணியின் முன்களத்தில் வேகமாக ஆடக்கூடிய வீரர் 19 வயது நிரம்பிய மொஹமட் ஆகிப். அனுபவ வீரர்களான மொஹமட் பசால் மற்றும் புதிய அணித் தலைவர் கவிந்து இஷான் ஆகியோரின் துணையுடன் தனது வேகம், நுணுக்கம் என்பவற்றால் எந்தவொரு நேரத்திலும் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் ஆகிப்பிடம் உள்ளது. எனவே, துர்க்மெனிஸ்தான் அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு வீரராக ஆகிப் இருப்பார்.

 

துர்க்மெனிஸ்தான் அணி

2022ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றில் தமது முதல் மோதலுக்காக இலங்கை வந்துள்ள துர்க்மெனிஸ்தான் அணிக்கு இந்தப் பயணம் மிகப் பெரிய ஒரு சவாலான பயணமாகவே இருக்க உள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு இலங்கை வந்துள்ள துர்க்மெனிஸ்தான் வீரர்கள் அனுபவ ரீதியில் இலங்கையைவிட மிகவும் உயரத்தில் உள்ளனர்.

துர்க்மெனிஸ்தான் அணியின் இறுதி மோதல்கள் அனைத்தும் ஆசியாவில் உள்ள முன்னணி அணிகளுடனே உள்ளது. இதில் குறிப்பாக, உலகக் கிண்ணத்தில் ஆடும் ஜப்பான் அணியுடனான மோதலையும் 3-2 என முடித்துள்ளமை அவ்வணியின் பலத்திற்கு முக்கிய சான்றாகும்.

அணியின் முக்கிய வீரராக மத்தியகள வீரர் அர்ஸ்லான்மிரத் அமனோவ் உள்ளார். 35 இற்கும் அதிகமான போட்டிகளில் தேசிய அணிக்காக ஆடியுள்ள இவர், அணியின் தலைமைப் பதவியையும் வகித்த அனுபவம் கொண்டவர்.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை