பாகிஸ்தானின் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், செல்வாக்கு மிக்க தேர்வாளராகவும் அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக், நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக், நியமிக்கப்பட்டுள்ளதனை உறுதிசெய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அவருக்கு தனித்துவமான தலைமை தேர்வாளர் பதவியினையும் வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்.

அணியின் பந்து வீச்சு பயிற்சியாராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் மிக வெற்றிகரமான டெஸ்ட் அணித்தலைவரான மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸூடன், இணைந்து இந்த சகாப்தத்தில் சிறந்த வெற்றிகளை பதிவு செய்வதற்கு மிக உறுதுணையாக இருப்பார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் விருப்பப்படி துணைப் பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ள, அணித் தேர்வில் ஈடுபட அதிகாரம் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2023ஆண்டு உலகக்கிண்ண தொடர் வரை வழங்கப்படுள்ளது.

அண்மையில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்த மிஸ்பா உல் ஹக், கடந்த இரண்டு வருடங்களாக வகித்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரரான டீன் ஜோன்ஸ்சை தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தவொரு முன்னணி பயிற்சியாளர்களும் விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையிலேயே மிஸ்பா உல் ஹக், நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக், அதன்பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் இணைந்து பயிற்சியாளர்களுக்கான பாடநெறிகளிலும், செயலமர்வுகளிலும் பங்கெடுத்து வந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மொசின் கான் தலைமையிலான கிரிக்கெட் குழுவிலும் இடம்பிடித்திருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் கடந்த சில தினங்களுக்கு முன் 2019-/20ஆம் ஆண்டுக்காக நடைபெறவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள உள்ளூர் கழகங்களை மதிப்பாய்வு செய்வதற்கான சுயாதீன குழுவிலும் மிஸ்பா உல் ஹக் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், எதிரணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, லீக் சுற்றின் முடிவில் 5ஆம் இடம் பிடித்து வெளியேறியது.

இது பாகிஸ்தான் இரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால் 2016ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த 51 வயதான தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தரின் பதவிக்காலத்தை நீடிக்காது அவரை பதவியிலிருந்து கிரிக்கெட் சபை நீக்கியது.

அதற்கு முன்னதாக அணியின் தேர்வாளராக இருந்த இன்சமாம் உல் ஹக், தாமே முன்வந்து தனது பதவியினை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட அதிரடி மாற்றங்களுக்கு பிறகு, பாகிஸ்தான் அணி தற்போது புதிய குழுவுடன் எதிர்வரும் கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை