ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை நேற்று நள்ளிரவு முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியிடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டுமென்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னர் சில தெளிவற்ற தன்மை இருந்தது. உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அதனால் ஜனாதிபதித் தேர்தல் குறித்தே நாட்டின் கவனம் திரும்பியுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் எந்தவொரு சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஒரு மாதத்தில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளலாம். ஜனாதிபதித் தேர்தலானது கட்டாயம் நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசம்பர் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் 16ஆம் சனிக்கிழமை அல்லது நவம்பர் 23ஆம் திகதிவரும் சனிக்கிழமையில் நடத்தலாம். ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை