ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கும் கோட்டாபய யாழ். வர முடியாது

பாதுகாப்பு இல்லையென வழக்கு விசாரணைக்கு வரமுடியாதவர்...

யாழ்.நகர் வருவதற்கு பாதுகாப்பில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் பிரசார காலத்திலும் யாழ்.நகர் வரமுடியாதென முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ண தெரிவித்தார்.

யாழ்.பொதுநூலக சிற்றுண்டிச்சாலை கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகனின் வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவ் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வருகைதரவேண்டியிருந்தது.

ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லை. தான் யாழ்ப்பாணம் வருவதற்கு பாதுகாப்பு இல்லையென குறிப்பிட்ட கட்டளை ஒன்று கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக அவர் நேற்றைய தினமும் (27) விசாரணைக்கும் வருகை தரவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு வழக்குக்கு வர முடியாது, பாதுகாப்பு இல்லை என கூறும் ஒருவர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு எவ்வாறு வர முடியும்?. மே உட்பட ஜூன் மற்றும் இம்மாதமும் விசாரணைக்கு வர முடியாதென்றும், தனக்கு பாதுகாப்பு போதாதென்றும் கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன், தொடர்புடைய மற்றொரு சம்பவம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பற்றி தேடித் தகவல் பெற்றவர்கள் தான் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் இராணுவத்திடமும், இராணுவத்திற்கு ஆதரவாக செயற்பட்ட குழுக்களிடமும் இருந்தன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சகலரின் பிரச்சினையையும் மஹிந்த அராங்கமும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தினருமே பொறுப்பேற்க வேண்டும்.

இது ஒரு அரச பயங்கரவாத சம்பவம். ஆகையினால் தான், நாங்கள் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கேட்கின்றோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்ட ஒருவர் தான் ஜனாதிபதியாக போட்டியிடுகின்றார். இந்த விடயம் தொடர்பில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.கடந்த ஆட்சியின் போது, வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள். லசந்த விக்கிரமதுங்க மற்றும் எக்னெலிகொட போன்றவர்களின் கொலைகள் இடம்பெற்றன.

இந்த மாதிரியான ஒரு வேட்பாளர் தான் ஜனாதிபதியாக போட்டியிடவுள்ளார். ஆகையினால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

 

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை