புகையிரத ஊழியர் பணி புறக்கணிப்பு; இ.போ.ச. ஊழியர் விடுமுறை இரத்து

புகையிரத ஊழியர் பணி புறக்கணிப்பு; இ.போ.ச. ஊழியர் விடுமுறை இரத்து-Railway Strike SLTB Staff's Leave Cancelled

- இன்றைய தபால் சேவை ரயில்களும் இடம்பெறவில்லை
- பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில்

சம்பள முரண்பாடுகளை பிரதானமாகக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் இன்று நள்ளிரவு (26) முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஏற்படவுள்ள பயணிகளின் போக்குவரத்து அசௌகரியத்தை தடுக்கும் வகையில், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரண்பாடு தீர்க்கும் வரை போராட்டம் தொடரும்
தமது சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் தீர்க்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என, புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் மநுர பீரிஸ் தெரிவித்தார்.

இவ்வேலைநிறுத்த போராட்டத்தில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வேலைநிறுத்தம் காரணமாக இன்று (25) பிற்பகல் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை, யாழ்ப்பாணம், தலைமன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை செல்லும்  இரவு அஞ்சல் ரயில்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரச நிறைவேற்று அதிகாரிகள் புறக்கணிப்பு ஆரம்பம்
இதேவேளை, அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு, சம்பள பிரச்சினையை முன்வைத்து இன்று முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைவர் வைத்தியர் நிமல் கருணாசிறி,  அரசாங்கம் தமது பிரச்சினைகளை தீர்க்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கம்
இதேவேளை, ஆசிரியர் தொழிற்சங்கம், நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரச நிர்வாக சேவை ஊழியர்கள் 15 நாட்களாக போராட்டம்
சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்க நிர்வாக சேவை ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் மீண்டும் பணியில் ஈடுபடுவதற்கு அச்சங்கத்தின் பொதுச் சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் திங்கட்கிழமை (30) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளனர்.

ஊனமுற்ற படைவீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
ஊனமுற்ற படைவீரர்களின் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்கிய நிலையிலும், 4 படை வீரர்கள் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச மருத்துவ அதிகாரிகள் ஒரு வார அவகாசம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கொழும்பில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது, அரசாங்க சேவையிலுள்ள சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்தது.

அவ்வாறு தீர்வு வழங்கப்படாவிட்டால், அரச நிறைவேற்று அதிகாரிகள் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தாமும் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக அச்சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியசர் நவிந்த சொய்சா தெரிவித்தார்.

தொழில்நுட்ப தொழிற்சங்கங்கம் அடையாள வேலை நிறுத்தம்
இந்நிலையில், தொழில்நுட்ப தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி மற்றும் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டணி ஆகியன, அவர்களின் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தனர்.

வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள் ஸ்தம்பிதம்
அரச நிர்வாக சேவை ஒன்றியம் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகள் காரணமாக, பல அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் அரச நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானது.

நீர் வழங்கல் சபை ஊழியர் ஆர்ப்பாட்டம்
இன்று (25) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர் சங்கம், நீர் வழங்கல் அமைச்சின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. சபையில் புதிய ஆட்சேர்ப்புகள் செய்யாது மனிதவள (Manpower) ஊழியர்களையே சேவையில் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Wed, 09/25/2019 - 21:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை