கொழும்பில் ஆர்ப்பாட்டம், பேரணிகளுக்கு நீதிமன்று தடை

'போரா' மாநாட்டை குழப்ப சிங்கள கடும் போக்கு அமைப்புகள் முயற்சி

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று முதலாம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 09 ஆம் திகதி வரை சர்வதேச போரா மாநாடு கொழும்பில் நடபெறுகின்றது.

இந்த மாநாட்டைக் குழப்பும் வகையில் சில அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தயாராகி வரும் நிலையிலேயே கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

'சிங்கள ஜாதிக பலமுலுவ அமைப்பின் ஏற்பாட்டாளரான மெடில்லே பஞ்ஞாலோக தேரர் மற்றும் ‘ராவணா பலய’ அமைப்பின் ஏற்பாட்டாளர் 'இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்' உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு எதிராகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், பேரணிகளை சட்டரீதியானதாகவும் அமைதியானதாகவும் நடத்திச் செல்ல எந்த தடையும் இல்லை எனவும் எனினும் கலகம், குழப்பம் விளைவிக்கும் எவ்வித செயற்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது எனவும் அவ் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்குத் தடையேற்படும் வகையிலோ, விபத்து மற்றும் அன்றாட செயற்பாடுகளுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையிலோ பேரணி நடத்தப்படக் கூடாது எனவும், அமைதியைச் சீர்குலைக்கும் சிறியளவிலான செயற்பாடுகளேனும் அனுமதிக்கப்படாது எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் .

நீதிமன்ற உத்தரவு சம்பந்தப்பட்ட பிக்குமாருக்கு நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய ராவணா பலய’ அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்,போரா மாநாட்டிற்குள் புகுந்து நாம் குழப்பம் ஏற்படுத்தப் போவதாக பொலிஸ் கூறுகிறது. நாம் கத்திகளை தூக்கிக்கொண்டு சென்று குழப்பப் போவது போன்று இவர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளனர்.ஸஹ்ரானின் தற்கொலை தாக்குதலின் பின்னர் இரண்டாவது முஸ்லிம் மாநாடு இங்கு நடைபெறுகிறது.இவர்களுக்கு நாம் விரும்பிய வேறு நாட்டில் நடத்தலாம். எதற்காக இலங்கையை தெரிவு செய்தார்கள்? அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் எமக்கு ஆட்சேபனை உள்ளது.இவ்வாறான முட்டாள் தனமாக வேலைகளை செய்யவேண்டாம் என்று கோருகிறோம்.பொய்யான காரணங்களை காட்டி பொலிஸ் நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளனர் என்றார். சிங்கள ஜாதிக பலமுலுவ அமைப்பின் ஏற்பாட்டாளரான மெடில்லே பஞ்ஞாலோக தேரர் கருத்து தெரிவிக்கையில் 130 மில்லியன் டொலர் பணம் கிடைக்கும் என்பதற்காக இங்கு மாநாடு நடத்த இடமளித்திருக்கிறார்கள்.சுற்றுலா துறை அமைச்சு இதற்கு விசேட ஏற்பாடுகளை வழங்கியுள்ளது.இதனை அனுமதிக்க முடியாது என்றார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை