முஸ்லிம் இளைஞர்கள் சமூகப்பணியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்

முஸ்லிம் இளைஞர்கள் சமூகப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவதன் மூலமே சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன விஷேட கூட்டம் சீனன் கோட்டை கொமியுனிடி போரத்தின் பங்குபற்றலுடன் பேருவளை மரக்கலாவத்த ஒய்வு விடுதியில் அண்மையில் மாவட்டத்தலைவர் இக்பால் ஸம்ஸூதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஸ்லிம் இளைஞர்கள் உண்மையான சமூக சிந்தனையுடன் நல்ல எண்ணங்களுடன் சமூகத்தின் எதிர்கால விமோசனம் கருதி சமூக சேவை பணியில் ஈடுபட்டால் சமூகத்தில் மறுமலர்ச்சியை நிச்சயம் தோற்றுவிக்க முடியும். சமூகப்பணிகளில் ஈடுபடும் போது நாம் புதிய தலைமுறையினரையும் இணைத்து பயணிக்க வேண்டும். இந்த விடயத்தில் எம் அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. இளைஞர்களை வழிதவறவிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடந்த கால சம்பவம் மூலம் நாம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டோம்.

முஸ்லிம் சமூகம் ஒரு போதும் நான் என்றும் நாம் என்றும் இணைக்கும் சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் எப்படி நடக்க வேண்டும், எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எமது மார்க்கம் அந்த வழியை மிக அழகாக காண்பித்துள்ளது.

பிரச்சினைகள் வந்த பின் அதனைப் பற்றி ஆராயாமல் பிரச்சினைகள் வரமுன் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் இன்று இப்படியான கூட்டமொன்றை நடாத்தி சமூகத்தின் எதிர்காலம்பற்றி மற்றும் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடியது. சிறந்த ஒரு குழு இவ்வாறு இயங்கி முழு நாட்டிற்கும் முன்மாதிரி காட்டியுள்ளது.

முஸ்லிம்களை பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்க நாம் முன்மாதிரிமிக்கவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக, நேர்மையானவர்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலமே எம்மைப்பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்கிக்கொள்ள முடியும் என்றார்.

பேருவளை விஷேட நிருபர்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை