நீதிமன்ற அதிகாரத்தை விட தேரர்களுக்கு அதிகாரமா?

பெளத்த தேரர்களுக்கான சட்டத்தின் பாரபட்சம் எமது நாட்டை மேலும் ஒரு இருண்ட யுகத்துக்கு கொண்டு செல்லும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பெளத்த பிக்குவின் பூதவுடலை நீதிமன்ற உத்தரவை மீறி இந்துக்களின் பகுதியில் தகனம் செய்தமை தொடர்பில் அவர் வெ ளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த வளாகத்தில் இறைபதமடைந்த பௌத்த மதகுருவின் நல்லடக்க தகனம் எமது தார்ப்பரியங்களை தகர்த்தெறியும் நடவடிக்கையாகும்.

காவற்துறையினருக்கு பௌத்த மதகுருக்களை மீறி செயற்பட முடியாதென்றால் இந்துக்களின் மனங்களை புண்படுத்துவது மாத்திரம் கைவந்த கலையாகவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.

தேரர்களுக்கு சட்டத்தின் மூலமான நீதிமன்ற அதிகாரத்தை விட ஒரு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்று நான் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன். மதங்களிடையே பாரபட்சமாக காட்டப்படும் நீதி இந்த அரசாங்கத்தின் போலி நல்லிணக்க செயற்பாடுகளையும் அதற்கு முண்டு கொடுக்கும் அரசியல்வாதிகளினதும் இயலாமையை இன்று தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக செயற்பட முடியாத நிலைமையில் கூட்டமைப்பின் தமிழ் தலைமைகள் இருந்துள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயம் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

Wed, 09/25/2019 - 11:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை