எதிரணி திருத்தமின்றி மக்கள் வங்கி சட்டமூலம் நிறைவேற்றம்

எதிரணியின் திருத்தங்கள் நிராகரிப்பு

மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் நிதி அமைச்சின் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டு எதிர்க்கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இத் திருத்தச் சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்திருந்ததுடன், சில திருத்தங்களையும் முன்வைத்தன. எனினும் எதிர்க் கட்சிகளின் திருத்தங்களை நிராகரித்தே மேற்படி திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் இச் சட்டமூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலத்துக்கு எதிர்க் கட்சிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, சுனில் ஹந்துநெத்தி, பிமல் ரத்நாயக்க ஆகியோர் திருத்தங்களை முன்வைத்தனர்.

சட்டமூலத்தின் 20ஆவது சரத்தின் 1ம்,2ம்,3ம்,5ம் பிரிவுகள் தொடர்பிலேயே அவர்கள் திருத்தங்களை முன்வைத்தனர். 20ஆவது சரத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில் மத்திய வங்கியின் நிதி சபையின் அனுமதியின்றி நிதி அமைச்சரின் உத்தரவின் பிரகாரம் மாத்திரம் கடன்முறிகளை விநியோகிக்க முடியுமென கூறப்பட்டுள்ளது.

நிதிச் சபையின் அனுமதியும் கட்டாயம் பெறப்பட வேண்டுமென்பதையே எதிர்க்கட்சியினர் திருத்தங்களாக முன்வைத்தனர். அத்துடன், மக்கள் வங்கியின் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை பல பிரிவுகளாக்கி தனியார்மயப்படுத்தும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதன்போது எதிர்க்கட்சியினரின் திருத்தங்கள் தொடர்பில் பதிலளித்த அமைச்சர்,

மக்கள் வங்கியின் மூலதனத்தை 50பில்லியன்களாக்கும் நோக்கிலும், இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகள் போன்று மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதியின்றி கடன்முறிகளை விநியோகிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்காகவுமே இச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டமூலத்தின் 20ஆவது சரத்தின் 1ம்,2ம்,3ம்,5ம் பிரிவுகள் குறித்து முன்வைக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் நிராகரிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.

மங்கள சமரவீரவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, சட்டமூலத்தின் 20ஆவது சரத்தின் 3ஆம் பிரிவுக்கு வாக்கெடுப்பை கோரினார்.

இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தினேஸ் குணவர்தனவின் கோரிக்கைக்கு ஆதரவாக 37பேரும், 72பேர் எதிர்த்தும் வாக்களினர். அதன் பிரகாரம் 35மேலதிக வாக்குகளால் சட்டமூலத்தின் 20ஆவது சரத்தின் 3ஆம் பிரிவு நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு பிரதான வாக்கெடுப்பு கோரப்படாமையால் வாக்கெடுப்பின்றி நிதி அமைச்சின் திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 09/21/2019 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை