ரூபவாஹினி விவகாரத்தில் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்படவில்லை

குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தது சுதந்திரக் கட்சி

வீரக்குமார திஸாநாயக்க

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளதாக அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கேற்ப ஒருவரை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அமைச்சர் ருவன் விஜேவர்தனதான் தான்தோன்றித்தனமாக நியமித்திருந்தார்.

அவரின் செயற்பாடுகளால் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் நோக்கிலும், மீண்டும் மக்களுக்கு சிறந்த சேவையை அதனூடாக வழங்கவுமே ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வீரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

 

'கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ருவான் விஜேவர்தன, தான்தோன்றித்தனமாக ரூபவாஹினி கூட்டுத்தானத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் சு.கவின் ஊடகப்பேச்சாளர் வீரக்குமார திஸாநாயக்க எம்.பியிடம் தினகரன் சார்பில் வினவிய போது,

அரச நிறுவனங்கள் அல்லது பொறுப்புள்ள கூட்டுத்தாபனங்களுக்கு தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமிக்கும்போது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் விசேட குழுவொன்றின் ஊடாகவே அவை நடைபெற வேண்டும். அதுதான் நீண்டகால முறையாகவுள்ளதுடன், ஜனாதிபதிக்குதான் அந்த அதிகாரமும் உள்ளது.

அக்குழுவின் ஆலோசனையின் பிரகாரம்தான் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஐ.தே.கவின் தேவைக்கேற்ப சிலரை கூட்டுத்தாபன தலைவராக நியமிக்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கடந்தகாலத்தில் முயற்சிகளை எடுத்திருந்ததுடன், ஜனாதிபதி செயலக குழுவின் அனுமதியின்றி புதிய தலைவரை அவர் தான்தோன்றித்தனமாக நியமித்திருந்தார்.

ஜனாதிபதி இந்த விடயத்தில் தான்தோன்றித்தனமாக நடந்துக்கொண்டுள்ளதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

ஊடகத்துறைக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதியே உள்ளார்.

மக்களுக்கு மீண்டும் சிறந்த சேவையை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும், கூட்டுத்தாபனத்தில் சிறந்த முகாமைத்துவத்தை ஏற்படுத்தவுமே இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை ஜனாதிபதி எடுத்திருந்தார் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை