யாழ்.பல்கலை ஆட்சேர்ப்பு பட்டியலில் பாகுபாடு இடம்பெறவில்லை

ஆட்சேர்ப்புப் பட்டியலில் எவருடைய பெயரும் நீக்கப்படவில்லை

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நியமனப் பட்டியலில் எந்தவித பாகுபாடும் இடம்பெறவில்லை என உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர் பதவிகளுக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் உயர் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் வட மாகாணத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

டக்ளஸ் தேவானந்தாவின் இக் கூற்று கவலைக்குரியது. ஆட்சேர்ப்புக்கள் செய்யப்படும்போது பிரதேச, இன ரீதியாக பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை. யாழ் பல்கலைக்கழகத்துக்கான ஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்கு மாகாணத்தை சேர்ந்தோருக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர் சிலர் இப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்து இம் மாகாணங்களில் வசித்து வருகின்றவர்கள்.

இதற்கிணங்கவே யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட ஆட்சேர்ப்புப் பட்டியலில் இவர்களின் பெயர்களை இணைக்குமாறு செயலாளர் பணித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்கு மாகாணத்தை சேர்ந்தோருக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்பதில் நான் உடன் படுகின்றேன்.

அதேவேளை பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் உரிய பதவிகளுக்கான கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்தாலும் ஏனைய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுவதுபோல் தகுதிகாண் பரீட்சை இந்த பல்கலைக்கழகத்துக்கும் உண்டு.

இதேவேளை கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் நிதி அமைச்சர், அமைச்சு அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவ துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இவ்வாரமும் பேசவுள்ளேன். சாதகமான முடிவு எடுக்கப்படும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை