முழுமையாக ஆராய ஐவரடங்கிய குழு ஜனாதிபதியால் நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்காக ஐவரடங்கிய ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொடர்புபட்டுள்ளதாக கருதப்படுகின்ற அரச ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அது தொடர்பில் அறிந்திருந்தவர்களை

 

பொருட்படுத்தாமை தொடர்பில் பல முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டமை, கடமையைத் தவறவிட்டமை, கவனயீனம், பொறுப்புக்களை நிறைவேற்றாமை மற்றும் செயற்றிறனற்ற செயற்பாடுகள் என்பன மீள நிகழாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதே இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாகும்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் துரித பக்கச்சார்பற்ற பூரண விசாரணை நடத்துவது, பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அமைப்புக்களின் செயற்பாடுகளை அடையாளம் காண்பது ஆகிய பொறுப்புக்களும் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளை முன்கூட்டியே அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமை, கவனயீனத்துடன் செயற்பட்டமை மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அடையாளம் காணுமாறும் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், நாசகார செயற்பாடுகள், சொத்துக்கள் மற்றும் மக்களுக்கு சேதங்களை விளைவித்தவர்கள், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

தாக்குதலுக்கு உதவியவர்கள், அதற்கான தூண்டுதல்களை செய்தவர்கள் மற்றும் சதித்திட்டம் தீட்டியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையில் உள்ளடக்கும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் அசம்பாவிதங்கள் மீள நிகழாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதும் ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐவரடங்கிய ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை 3 மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, 2 மாதங்களுக்கு ஒரு தடவை இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

6 மாதங்களுக்குள் விசாரணைகளின் முடிவு, பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை, அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தமக்கு ஒப்படைக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆணைக்குழுவின் செயலாளராக ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளர் டபிள்யு. எம்.எம். அதிகாரி செயற்படுவார்.

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை