கூட்டணி பேச்சுக்கு தடையேற்படும் வகையில் தயாசிறியின் கருத்து

பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் இடம்பெற்றும்வரும் கூட்டணிப் பேச்சுகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுவரும் சு.கவின் பொதுச் செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தினகரனுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சு.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. சின்னம் என்பது ஒரு பிரச்சினையில்லை. அதனை வைத்து போலி பிரச்சினையை சிலர் உருவாக்க முற்படுகின்றனர். சிலருக்கு பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் இல்லை.

சு.கவை படுகுழியில் தள்ளி அதன் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.

மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்து அவர்களால் பயணிக்க முடியாது. ஐ.தே.கவுடன் இணைந்து பயணித்தமையால்தான் சு.க நாசமடைந்தது.

ஐ.தே.கவுடன் மீண்டும் இணைய முற்பட்டால் அவர்களுக்கு எதிர்காலமில்லை. சு.கவின் எதிர்காலம் பொதுஜன பெரமுனவில்தான் உள்ளது. தேர்தலுக்காக நாம் அமைக்கவுள்ள கூட்டணியின் பிரதான பதவிகளில் ஒன்றை சு.கவுக்கு வழங்க ஆலோசித்து வருகின்றோம்.

சு.கவின் தனித்துவத்தை பாதுகாப்பதில் உறுதியாகவுள்ளோம். ஆனால், கூட்டணிப் பேச்சுகளில் குழப்பம் ஏற்படும் வகையில் தயாசிறி போன்றோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

தனிப்பட்ட அரசியல் நிழகழ்ச்சி நிரலின் கீழ் ஐ.தே.கவுடன் இரகசிய ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளாரா எனத் தெரியவில்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை