அணியின் தேவைகருதியே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன் - குசல் மெண்டிஸ்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான்காவது இலக்கத்தில் விளையாடி வந்த குசல் மெண்டிஸ் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டியில் அணியின் தேவைகருதியே தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே பல போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அனுபவம் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்த குசல் மெண்டிஸ், ரி-20 போட்டிகளில் இனிவரும் காலங்களில் ஆரம்ப துடுப்பட்ட வீரராகக் களமிறங்க ஆவலுடன் எதிரபார்த்து இருப்பதாக கூறினார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்றுமுன்தினம் (01) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தார்.

சுமார் ஒருவருட கால இடைவெளிக்குப் பிறகு ரி-20 அணியில் இடம்பிடித்த குசல் மெண்டிஸ், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமறிங்கி அரைச் சதம் கடந்து ரி-20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்டத்தையும் பதிவுசெய்தார்.

போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தனது மீள்வருகை அரைச் சதம் குறித்து குசல் கருத்து வெளியிடுகையில்,

”அணியின் தேவைகருதி நான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியிருந்தேன். பயிற்சியாளரும், மாலிங்கவும் என்னை அழைத்து நியூசிலாந்து அணியில் இடதுகை சுழல்பந்துவீச்சாளரும், வலதுகை லெக்ஸ்பின் பந்துவீச்சாளரும் இருப்பதால் நான்காவது இடத்தில் இருந்து என்னை ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறக்கினார்கள்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி எனது பொறுப்பை நான் சரிவர செய்தேன் என நம்புகிறேன். எனக்கு இந்த இடம் புதிதல்ல. நான் இதற்குமுன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியுள்ளேன்” என தெரிவித்தார்.

ரி-20 போட்டிகளில் எந்த இடத்தில் களமிறங்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு குசல் மெண்டிஸ் பதிலளிக்கையில், எனக்கு முதல் நான்கு இடங்களில் விளையாடுவதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் அந்த இடங்களில் நான் இதற்குமுன் விளையாடியுள்ளேன். ஆனாலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நிறைய சந்தர்ப்பங்களில் ஓட்டங்களைக் குவித்துள்ளேன் என நான் அணி முகாமைத்துவம் மற்றும் பயிற்சியாளர், அணித் தலைவரிடம் கூறினேன்.

எதிர்வரும் காலங்களில் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அந்தப் பொறுப்பை சரிவர செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து விளையாடுவது சரியான முடிவாக இருக்கலாம். ரி -20 போட்டிகளில் தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்க ஆவலாக உள்ளேன். எனக்கு நான்காவது இலக்கத்தில் களமிறங்கவும் முடியும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான் நான்காவது இலக்கத்தில் களமிறங்கித்தான் ஓட்டங்களைக் குவித்து வருகிறேன். எனவே ரி-20 ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவது பொருத்தம் என நம்புகிறேன்” என்றார்.

இந்தப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இந்தப் போட்டியில் 174 ஓட்டங்களுக்குள் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் போனது குறித்து குசல் மெண்டிஸிடம் வினவிய போது, ”எமது பந்துவீச்சாளர்கள் தமது பங்களிப்பினை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முடிந்தது.

போட்டியின் நடுவில் பனிமூட்டம் காரணமாக விக்கெட்டை வீழ்த்துவது சற்று கடினமாக இருந்தது. இதனால், பந்துவீச்சாளருக்கு தமது திட்டங்களை உரிய முறையில் செயற்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.

எமது ஓட்ட இலக்கும் 170 அல்லது 172 ஓட்டங்களாக இருந்தது. அவர்களது பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். ஆனால் நாங்களும் ஒருசில தவறுகளை செய்திருக்கலாம். இதனால் எம்மால் வெற்றியை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது” என அவர் குறிப்பிட்டார்.

கண்டி பல்லேகலை மைதானத்தில் நேரம் செல்லச் செல்ல பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்துகொண்டு ஏன் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

எமது அணியில் சிரேஷ்ட வீரர்கள் மிகவும் குறைவு. ஏனெனில் அவர்கள் முதலில் துடுப்பெடுத்தாடிய 170 அல்லது 180 ஓட்டங்களைக் குவித்திருந்தால் நிச்சயம் அந்த இலக்கை எம்மால் துரத்தியடிக்க முடியாமல் போயிருக்கும். ஏனெனில் எமது அணியில் அனுபவமிக்க வீரர்கள் எவரும் இல்லை.

மறுபுறத்தில் எமக்கு அதிகளவான ரி -20 போட்டிகளும் கிடையாது. அதன் காரணமாக முதலில் துடுப்பெடுத்தாடி அதிகளவு ஓட்டங்களைக் குவிக்க தீர்மானித்திருக்கலாம் என நான் நம்புகிறேன்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் லசித் மலிங்க, இசுரு உதான மற்றும் அகில தனன்ஞய போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருக்கின்றனர். எனவே அவற்றையெல்லாம் யோசித்து தான் முதலில் துடுப்பெடுத்தடினோம்” என தெரிவித்தார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் இன்னும் சில மாற்றங்களை செய்திருக்கலாமா? என எழுப்பிய கேள்விக்கு குசல் மெண்டிஸ் கருத்து தெரிவித்த போது,

என்னைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட இடம் குறித்து திருப்தி அடைகிறேன். குசல் ஜனித் பெரேரா முதல் ஆறு ஓவர்களில் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அவிஷ்கவும் தனது வழமையான இடத்தில் வந்து விளையாடினார். எனினும், அவிஷ்க பெர்னாண்டோ மிக விரைவில் ஆட்டமிழந்த காரணத்தால் தான் நிரோஷன் டிக்வெல்ல அடுத்து ஆடுகளம் வந்தார். அதிலும், பின்வரிசையில் வேகமாக அடித்தாடுகின்ற வீரர்கள் இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது” என்றார்.

களத்தடுப்பில் செய்த தவறுகள் குறித்து பேசிய அவர், கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் அடிக்கடி இந்த தவறு இடம்பெறும். உலகக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டால் நான் 3 அல்லது 4 முக்கிய பிடியெடுப்புகளை தவறவிட்டுள்ளேன். அதற்குமுன் நான் தான் இலங்கை அணியில் இருந்த சிறந்த களத்தடுப்பாளர்.

போட்டியின் போது களத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம். இது இலங்கைக்கு மாத்திரம் இடம்பெறுகின்ற தவறு கிடையாது.

எவரும் வேண்டும் என்றே பிடியெடுப்புகளைத் தவறவிட மாட்டார்கள். போட்டியின் தன்மையைப் பொறுத்த இவ்வாறு துரதிஷ்டவசமாக பிடியடுப்புகளை தவறவிட வேண்டி ஏற்படும்” என்றார். எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி யின் திட்டம் என்ன என்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு குசல் மெண்டிஸ் கருத்து தெரிவிக்கையில்,

இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளைவிட இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தோம்.

நாங்கள் 174 ஓட்டங்களைக் குவித்தோம். அதேபோல எமது பந்துவீச்சாளர்கள் போட்டியின் இறுதி ஓவர் வரை போட்டியைக் கொண்டு சென்றனர். இந்த ஆரம்பம் எமக்கு திருப்தியைக் கொடுக்கிறது. எனவே, இன்றைய போட்டியைப் போல எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என கூறினார்.

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை