நிறைவேற்ற முடியாதவற்றை நிறைவேற்றும் வேட்பாளரே இம்முறை நிறுத்தப்படுவார்

டிசம்பர் 7 இல் ஐ.தே.மு ஜனாதிபதி பதவியேற்பார்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் டிசம்பர் 7ஆம் திகதி புதிய ஜனாதிபதியாக தெரிவாவார் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதனை இலக்காகக் கொண்டு வெற்றிகொள்ளக் கூடிய வேட்பாளரே களமிறக்கப்படுவார். தோல்வியடையும் வேட்பாளர் நிறுத்தப்படமாட்டார் என்றும் அவர் கூறினார்.

குளியாப்பிட்டி பஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளரை நாம் நிறுத்தப் போவதில்லை.

வெற்றியடையும் வேட்பாளரையே நிறுத்துவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி அவரை வெல்லவைத்துள்ள நிலையில் நாம் தற்பொழுது பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இவர் பற்றி முன்னரே உங்களுக்குத் தெரியாதா என்றே சகலரும் கேட்கின்றனர். சகலரும் என்னைக் கேட்பதால் எனக்குப் பிரச்சினையாகியுள்ளது. இதனால் இம்முறை நிறுத்தப்படும் வேட்பாளர் இதுவரை நடைமுறைப்படுத்த முடியாத விடயங்களை ஐந்து வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தக் கூடிய தலைவராக இருப்பார். இதற்காக பாரிய கூட்டணி அமைத்து வேட்பாளரைக் களமிறக்குவோம்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தினர். அவர் ஜனநாயகம் என்ன என்பது பற்றியே தெரியாத வேட்பாளர். இராணுவத்திலிருந்து சகலரும் அவர் சொல்வதைச் செய்வார்கள்.அவருக்கு ஜனநாயகம் பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ எதுவும் தெரியாது. அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை. ஆரம்பத்தில் கோட்டா அலை அடித்தபோதும் தற்பொழுது அவர்களுக்குக் காற்றுப்போயுள்ளது என்றார்.

இதேவேளை ஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் இறுதிப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 6 ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதால் அவர் 5 ம் திகதி நாடு திரும்பியதும் 6 ம் திகதி ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.தே. கட்சியின் புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அதனால்தான் வேட்பாளர் பெயர் தெரிவு தொடர்பில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் 6ம் திகதி இடம்பெறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் அது வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று 2ம் திகதி மாலைதீவு பயணமாகிறார். அவர் மீண்டும் எதிர்வரும் 5ம் திகதி நாடு திரும்பவுள்ளார். (ஸ)

 

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை