பல்கலை கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

விசேட குழுவும் நியமிக்கப்படும்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு குழுவொன்றை நியமிப்பதன் மூலம் விரைவில் தீர்வு காணப்படுமென சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கூடியது.

இதன்போது கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, வேலை நிறுத்தம் காரணமாக ஒருவார காலமாக மூடிக்கிடக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறதென எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அத்துடன் தனக்கு கிடைத்த தகவல்களுக்கமைய குழுவொன்றினால் அனுமதிக்கப்பட்ட சம்பளமே தற்போது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும்  நேற்று சபையில் வாக்குறுதியளித்தார். மேலும் குழுவொன்றை நியமிப்பதன் மூலம் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட "ஸ்ரம வாசனா" நிதிய திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே, கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை நியாயமான தென்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் கல்விசாரா உழியர்களுடன் பேச்சு நடத்தி விரைவில் அவர்களுக்கான தீர்வை பெற்றுத் தரவேண்டுமென்றும் சபையில் கேட்டுக்கொண்டார்.

 

எம்.எஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை