தமிழர்களின் இரத்தத்தை உறுஞ்சியவர்கள் இன்று தீர்வுபெற்றுத் தருவதாக நாடகம்

கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்தவர்கள் இன்று தீர்வுபெற்று தருவதாக நாடகமாடுகின்றனர். நாட்டில் ஆட்சி செய்கின்ற பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான் .நாம் அதனை ஏற்றுக் கொள்கின்றோம். இருந்தும் அதிக கெட்டவனை விட, குறைந்தளவு கெட்டவனுடன் இணைந்து செயற்படுவது உசிதமான முடிவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கோரைக்களப்பு சக்தி வித்தியாலய பாடசாலையில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக் கொடுத்து ஆட்சியை தக்கவைத்துள்ளது. இரண்டு கட்சியினரும் கெட்டவர்கள்தான். அதில் குறைந்த கெட்டவர் யார், கூடிய கெட்டவர் யார், என ஆராய்ந்து பார்த்து தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய தீர்வுகளை பெற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து இருக்கிது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆட்சிக்கு அழுத்தங்களை கொடுத்ததன் விளைவுதான் 75,90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் கல்வி, பொருளாதாரம், வீதி அபிவிருத்திகள் தீர்வு ரீதியான செயற்திட்டங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி மீது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த அழுத்தங்களும் ஒத்துழைப்புக்களுமே காரணம் என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் இந்த ஆட்சியை மாற்றி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று யார் ஆட்சியில் இருந்திருப்பார்கள். தமிழ் மக்களின் நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஊடக அடக்கு முறைகள், வெள்ள வான் கலாசாரம் உட்பட பல அநீதிகளுக்கு இடம்கொடுக்க முடியாது, என்றதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதரவு வழங்கியதுடன் அதன் ஊடாக பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்திகள் நோக்கிய பயணமும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன என்றார்.

திருக்கோவில் தினகரன் நிருபர்-

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை