பொலன்னறுவைக்கு சொகுசு கடுகதி ரயில்

கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரையான “புலதிசி” நகர் கடுகதி அதிநவீன சொகுசு ரயில் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைத்ததுடன் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணித்தார். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகள் இந்த பயணத்தில் பங்கேற்றனர்.

இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதுடன் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும். மறுநாள் அதிகாலை 3.45 க்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் இந்த ரயில் மு.ப. 9.06 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

இப்புதிய கடுகதி ரயில் பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரங்கொட ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.

ரயில் சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள ‘புலதிசி’ நகர் சேவை கடுகதி புகையிரதம் எஸ் 13 சார்ந்த அதிநவீன சொகுசு ரயிலாகும்.

கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை நகரங்களுக்கிடையிலான விசேட ரயில் சேவை கடந்த சில தசாப்தங்களாக இடம்பெறவில்லை என்பதுடன், அதனை நிவர்த்திக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் பொலன்னறுவை கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை