வெளிநாட்டு படைகளை விலகியிருக்க ஈரான் ஜனாதிபதி ரூஹானி எச்சரிக்கை

அமெரிக்க துருப்புகள் சவூதி விரைவு:

அமெரிக்க துருப்புகள் சவூதி அரேபியாவில் நிலைநிறுத்தப்படுவது குறித்த அறிவிப்பை அடுத்து வெளிநாட்டு படைகள் வளைகுடாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு படைகள் வேதனை மற்றும் குழப்பத்தை மாத்திரமே ஏற்படுத்துவதாகவும் அதனை ஆயுத போட்டிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சவூதி எண்ணெய் நிலைகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து சவூதிக்கு மேலதிக துருப்புகளை ஈரான் அனுப்பவுள்ளது. இந்த தாக்குதலுக்கு சவூதி மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் ஈரான் மீதே குற்றம்சாட்டுகின்றன.

எனினும் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய வளைகுடா அமைதி முயற்சி ஒன்றை முன்வைக்க இருப்பதாகவும் ரூஹானி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உடனான அணு சக்தி உடன்படிக்கையை கைவிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அதிகரித்த நிலையில் இந்த ஆண்டில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி சவூதியில் அப்கைக் மற்றும் குரைஸ் எண்ணெய் நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இடம்பெற்ற தாக்குதல்கள் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கு பின்னால் ஈரானே இருப்பதாக சவூதி மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டுகின்றபோதும் ஈரான் அதனை மறுத்து வருகிறது.

1980 – 1988 ஈரான் – ஈராக் யுத்தத்தின் நினைவு நிகழ்வில் பங்கேற்ற ரூஹானி உரை நிகழ்த்தினார். தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஏனைய நகரங்களில் இராணுவ அணுவகுப்புகளும் இடம்பெற்றன.

“வெளிநாட்டு படைகள் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதோடு எமது பக்கள் மற்றும் எமது பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற நிலையையே ஏற்படுத்தும்” என்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய ரூஹானி குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இவ்வாறான வெளிநாட்டு படைகள் நிலைநிறுத்தப்பட்டது பேரழிவை ஏற்படுத்தியது என்று கூறிய அவர் அவர்களை விலகி இருக்கும்படி குறிப்பிட்டார்.

“அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், எமது பிராந்தியத்தை ஆயுதப் போட்டித் தளமாக மாற்றக்கூடாது. மேலும் எமது நாடுகள் மற்றும் எமது பிராந்தியத்தில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்களோ அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்” என்றும் ரூஹானி குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாளை நியூயோர்க்கில் ஐ.நா பொதுச் சபை கூட்டம் இடம்பெறவிருக்கும் நிலையில் பிராந்தியத்தில் அமைதி முயற்சி ஒன்றை முன்வைப்பது குறித்து ரூஹானி அறிவித்துள்ளார். எனினும் அது பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.

ஆனால் அவ்வாறாக அமைதி மூலமாக மாத்திரமே ஹோர்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என்று ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிராந்தியத்தின் அண்டை நாடுகளுடனான கடந்த கால தவறுகளை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாகவும் ரூஹானி வலியுறுத்தியுள்ளார்.

“இந்த உணர்வுபூர்வமான மற்றும் முக்கியமான வரலாற்று தருணத்தில் எமது அண்டை நாடுகளுடன் சகோதரத்துவம் மற்றும் நட்பின் கரத்தை நாம் நீட்டும் அறிவிப்பை வெளியிடுகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் அமைதி முயற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனார். சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டணிகள் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தினால் தாமும் சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வன்முறைகளை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியமாக இருப்பதாக யெமனுக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் மார்டின் கிரிப்பித் குறிப்பிட்டுள்ளார்.

சவூதியின் கோரிக்கைக்கு அமைய மிதமான அளவு படையினரை சவூதியில் நிலைநிறுத்துவது குறித்த அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இராணுவ உபகரணங்களை வழங்குவதையும் விரைவுபடுத்துவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவுப்புகளுக்கு எதிராக ஈரானிய புரட்சிக் காவல் படை கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதன் தளபதியான மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி, “எச்சரிக்கையாக இருங்கள், எந்தத் தவறும் செய்யாதீர்கள்” என்று அமெரிக்கா மற்றும் சவூதி அரேபிய அரசுகளுக்குக் கூறியுள்ளார்.

“தமது பூமியை பிரதான யுத்தகளமாக மாற்ற விரும்புபவர்கள் அவ்வாறே செய்யட்டும். மட்டுப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்காது. எத்தகை தாக்குதலுக்கும் நாம் பதலடி கொடுப்போம்” என்று அவர் எச்சரித்திருந்தார்.

இதனிடையே சவூதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேவையான நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்கப்படும் என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக அந்நாடு மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளது.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜுபைர், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தது என்றும், விரைவில் விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ரியாதில் செய்தியாளர்களிடம் பேசிய ஜுபைர், சவூதி அரசு தங்களின் கூட்டணி நாடுகளுடன் ஆலோசித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு உள்ளது என்றும், சர்வதேச பொருளாதாரத்தை அச்சுறுத்திய இந்த தாக்குதலுக்கு திடமான மற்றும் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்களின் மிச்சங்கள், மற்றும் ஏவுகணைகளை காண்பித்து இது ஈரானின் செயல்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சு கூறியது.

இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்காவும் குற்றம் சுமத்தியிருந்தது. பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தாக்குதல்கள் ஈரானின் தெற்கு பகுதியில் இருந்து நடத்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் சவூதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கப் படைகளை அனுப்புவதாக தெரிவித்தார்.

அதன்பின் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது புதிய தடைகளை விதித்தார். நாட்டின் மத்திய வங்கி மற்றும் ஈரானின் முதலீட்டு நிதியத்தை இலக்கு வைத்து இந்த தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்கா விதித்திருக்கும் புதிய தடைகளை ஈரான் கடுமையாகச் சாடியது. ஈரானியர்கள் உணவு, மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் இலக்கு என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜவாத் ஸாரிப் கூறினார். அமெரிக்காவின் இந்தச் செயல் அபாயகரமானது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை