தபால் வாக்கு விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்க யோசனை

தபால் வாக்கு முடிவுத் திகதியை நீடிக்க யோசனை-Postal Voting Application Closing Date Extension

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குகளிப்புக்கான விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் யோசனை செய்து வருகின்றது.

இது தொடர்பான விண்ணப்ப திகதி இன்று (30) நிறைவடையவிருந்த நிலையில், தற்போது இடம்பெற்று வரும் புகையிரத தொழிற்சங்க போராட்டம் காரணமாக அரசாங்க ஊழியர்களின்  வருகை மற்றும் தபால் சேவைகளில் இடம்பெற்றுள்ள ஸ்தம்பிதம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, விணப்ப திகதியை நீடிப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகின்றது.

இன்று இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் கோரப்பட்டது.

தகுதி பெற்ற  அரசாங்க ஊழியர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 30, 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்பதோடு, தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்தோர் எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி எக்காரணத்தினாலும் நீடிக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்ட வாக்காளர்கள் உடனடியாக தனது விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் குறித்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவற்றை அத்தாட்சிப்படுத்தி உரிய தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்புவதற்கு அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

Mon, 09/30/2019 - 14:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை