முரளியை அழைத்து சென்றால் தமிழர் ஆதரவு கோட்டாவுக்கு கிடைக்காது

நாம் புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையில் பழையவற்றை களைந்து பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை வீணடிக்கும் விதத்தில்

கருத்துக்களை தெரிவிப்பவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாம் கடந்த ஐந்து வட காலத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகளையோ அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் மாற்றங்களையோ பெறமுடியவில்லை. இருப்பினும் இன்று பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அதி கூடிய ஆதரவினை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக புதிய பாதையை வகுக்க தயாராக உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் தகுதி மீறிய வார்த்தை பிரயோகங்களை முற்றிலும் எதிர்க்கின்றோம்.

இவர் போன்றவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. மாறாக தமிழர் என்ற அடையாளத்தை கூட இவர் கடந்த காலங்களில் காண்பித்ததும் இல்லை. இவரது வார்த்தைகளை நம்பி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ களம் இறங்குவாரேயாயின் இது நகைப்புக்கு இடமான விடயமாகும். இவரைப் போன்றவர்களையும் காலாவதியான சில தமிழ் அரசியல்வாதிகளையும் இணைத்துக் கொண்டு செல்வாராயின் நாம் இந்த பயணத்தில் சங்கமிக்க தயாராக இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளாலேயே நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவர் தெளிவான முறையில் எமது தமிழ் மக்களுடன் பயணிக்க தயாராக உள்ளார் என்பது அவருடனான சந்திப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம் என்றார்.

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை