தேர்தலின் சுயாதீனம்; பொலிஸார் பக்கச் சார்பின்றி செயற்படவேண்டும்

பொலிஸாருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகாத வகையில் பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் தங்களது கடமைகளை மேற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில் நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

பொலிஸ் திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து மேலும் தரமான பொலிஸ் சேவையை ஸ்தாபிப்பதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தலைமையில் மாதந்தோறும் இச்சந்திப்பு இடம்பெற்று வருவதுடன், கடந்த சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  

பொலிஸ் அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஏனைய அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நீக்குதல் குறித்து தற்போது பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பொது நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கு வருவது குறித்து விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.  

அதிகாரிகளின் ஆரோக்கிய நிலைமை தொடர்பில் பரீட்சிப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல், பொலிஸ் மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவர்களின் பற்றாக்குறையை சீர் செய்வதற்கு துரிதமாக மருத்துவர்களை இணைத்துக்கொள்ளுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.    புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கப்பம் பெறுதலை கட்டுப்படுத்துதல், சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.     

 

Sat, 09/28/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை