இஸ்ரேல் – ஹிஸ்புல்லா லெபனான் எல்லையில் பரஸ்பரம் தாக்குதல்

கடந்த ஒருவாரமாக நீடித்த பதற்றத்தை அடுத்து லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹஸ்புல்லா அமைப்புகளுக்கு இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

எல்லை பகுதியில் இருக்கும் தமது இராணுவத் தளங்கள் மற்றும் வாகனங்கள் மீது பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்டு ஹஸ்புல்லா தாக்கியதை அடுத்து தெற்கு லெபனான் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய எல்லை நகரான அவிவிமில் இருக்கும் பல இலக்குகள் மீது இந்த ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

இதற்கு பதில் நடவடிக்கையாக லெபனானில் 100 இலக்குகள் மீது செல் வீச்சு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் பீரங்கிகளை அழித்ததாகவும் இஸ்ரேலிலுள்ள பலரும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதல்களில் தமது தரப்பில் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

“இஸ்ரேலிய பாதுகாப்பு படைத் தளம் மற்றும் இராணுவ வாகனங்களை நோக்கி லெபனானில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பல இடங்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் செல் தாக்குதல்களும் முடிந்து விட்டதாக குறிப்பிடும் இஸ்ரேலிய இராணுவம் ஹிஸ்புல்லாவுடனான புதிய சுற்று மோதல்களும் நிறைவடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளது.

ஏவுகணை தாக்குதலை அடுத்து லெபனானின் எல்லை நகரங்களான யரூன் மற்றும் மரூன் அல் ராஸ் மீது இஸ்ரேல் குறைந்தது 40 செல் வீச்சுகளை நடத்தியதாக லெபனான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

குறைந்தது ஒரு வான் தாக்குதல் இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த எல்லை மோதல்களை அடுத்து, நிலைமை ஒரு முழுமையான யுத்தமாக மாறுவதை தவிர்ப்பதற்கு லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் பிரான்சின் உயர் இராஜதந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரு தரப்பினரிடமும் இந்த விவகாரம் தொடர்பில் தலையிடும்படி அவர் கேட்டுக்கொண்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஹிஸ்புல்லா வளாகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலால் முன்னெடுக்கப்பட்டது என்று அந்த அமைப்பு கூறியதில் இருந்து இந்த பதற்றம் ஏற்பட்டது.

இஸ்ரேல் தாக்குதல் ஒன்றுக்கான அழைப்பை விடுத்திருப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எந்த ஒரு சூழ்நிலைக்கும் இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார்.

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை