சட்டத்தை தோற்கடிக்கும் எதிரணியின் முயற்சி தோல்வி

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் சட்டத்தை தோற்கடிக்கும் எதிரணியின் முயற்சி நேற்று பாராளுமன்றத்தில் இறுதி நேரத்தில் தோல்வியடைந்தது. ஆளும் தரப்பில் குறைந்தளவு எம்.பிக்களே சபைக்கு வருகை தந்திருந்தனர். இந் நிலையில் குறித்த சட்டமூலம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்துமாறு ஐ.ம.சு.மு மற்றும் ஜே.வி.பி தரப்பில் கோரப்பட்டது. இதற்கு ஆளும் தரப்பு ஆட்சேபனை வெளியிட்டிருந்த நிலையில் சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர் கூட்டம் நடத்தப்பட்ட பின்னர் குறித்த சட்டமூலம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தாமல் வேறு தினத்தில் குறித்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி ஒழங்குவிதிகள் மீதான விவாதம் நடைபெற்றது.அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம இது தொடர்பான யோசனையை முன்வைத்து உரையாற்றினார்.இதனை தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆளும் தரப்பு எதிர்த்ததரப்பு எம்.பிக்கள் கருத்து முன்வைத்தனர் . இறுதியாக அரவிந்த குமார் எம்.பி உரையாற்றினார். அவரை தொடர்ந்து சுமார் 10 எம்.பிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டாலும் எவரும் சபைக்கு வருகை தரவில்லை.இந்த நிலையில் குறித்த சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்துமாறு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கோரிக்கை விடுத்தார். ஆனால் வேறு தினத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரினார். வாக்கெடுப்பு நடத்துமாறு கோருவதும் வாக்கெடுப்பை பின்போடுவதும் ஆளும் தரப்பினாலே முடிவு செய்யப்படும். இந்த கட்டளைகளை வாபஸ் பெறவும் முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு வாக்கெடுப்பை பின்போடுவதாக இருந்தால் குறித்த ஒழுங்கு விதிகளை வாபஸ்பெற வேண்டும் என செஹான் சேமசிங்க ஆளும் தரப்பிடம் கோரினார்.

அடுத்து கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி குறிப்பிடுகையில்,மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் உரையாற்றியுள்ள நிலையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.இதனை பின்போட முடியாது.இன்று வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசாங்கம் முதலில் முடிவு செய்தது. எம்.பிக்கள் இன்றி வாக்கெடுப்பு தோற்கும் என்ற அச்சத்தில் இதனை ஒத்திவைக்க இடமளிக்க முடியாது என்றார்.

இதன் ​போது கருத்துத் தெரிவித்த சபைக்கு தலைமை தாங்கிய சிரியாணி விஜேவிக்ரம எம்.பி, வாக்கெடுப்பை ஒத்திவைப்பது தொடர்பிலும் வாக்கெடுப்பு கோருவது தொடர்பிலும் உள்ள நிலையியற் கட்டளைகளை முன்வைக்குமாறு இரு தரப்பினரிடம் கோரினார்.

பிமல் ரத்னாயக்க எம்.பி கூறியதாவது,குறித்த தினத்தில் முடிவு செய்யப்பட்ட பணிகளின் பிரகாரம் வாக்கெடுப்பை வேறு தினத்திற்கு மாற்ற முடியாது ஒழுங்குப் புத்தகத்தில் வாக்கெடுப்பு நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த ஒழுங்குவிதிகளை வாபஸ் பெற வேண்டும் அல்லது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்கெடுப்பு தோற்கும் என்பதற்காக அதனை பிற்போட அரசாங்கத்துக்கு முடியாது என்றார்.

சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல,வாக்கெடுப்பு கோருவது தொடர்பில் அரசாங்கம் தான் முடிவு செய்யும் என்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,இந்த விவாதம் தொடர்பில் அமைச்சர் பதில் வழங்க வேண்டும்.அதன் பின்னரே விவாதம் நிறைவடையும் என்றார்.

மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி மீண்டும் கருத்து கூறியதோடு,ஐ.தே.கவின் குருநாகல் கூட்டத்திற்காக வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்படவில்லை.இந்த ஒழுங்குவிதிகள் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.அல்லது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றார்.

அடுத்து உரையாற்றிய முஜீபுர் ரஹ்மான் எம்.பி.சபைக்கு தலைமை தாங்கும் எம்.பி இருதரப்பினரதும் கருத்துக்களை வினவினார். பின்னர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார் என்றார்.

இதனையடுத்து சபாநாயகர் சபாபீடத்திற்கு வருகை தந்தார்.

அடுத்து பிரதமர் உரையாற்றினார்.இந்த விவாதத்தில் மேலும் உரையாற்ற அமைச்சர் கால அவகாசம் கோரியுள்ளார். அமைச்சர் சபையில் இல்லாத நிலையில் நாளை (இன்று) வாக்கெடுப்ப நடத்த முடியும்.46 ஆவது சரத்தின் கீழ் வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையை நாம் முன்வைக்கவில்லை.இது அரசின் பிரேரணை.இது தொடர்பில் அரசே முடிவு செய்யும்.எதிரணியின் கருத்துகளுக்கு அமைச்சர் பதில் வழங்க வேண்டும் என்றார்.

பந்துல குணவர்தன எம்.பி அதனை தொடர்ந்து கருத்து கூறினார். சகல பேச்சாளர்களினதும் பெயர்கள் வாசிக்கப்பட்டன.எமது தரப்பில் இருந்து வாக்கெடுப்பு கோரப்பட்டது என்றார்.

பிரதமர் ​குறிப்பிடுகையில்,இன்றைய விவாதம் தொடர்பில் பிரதமர் பதில் வழங்க தயாராக இருப்பதால் வேறு தினத்தில் வாக்கெடுப்பு நடத்துவதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த சபாநாயகர், கட்சித் தலைவர் கூட்டத்தின் பின்னர் முடிவு அறிவிப்பதாக தெரிவித்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

3.45 மணியளிவில் ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் 4.15 மணியளவில் மீள ஆரம்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த சர்ச்சை குறித்து ஆராயப்பட்டது.பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் வாக்கெடுப்பு கோருவதும் பிற்போடுவதும் சபை முதல்வரின் பொறுப்பாகும். வாக்கெடுப்பு நடத்தும் யோசனையை அவர் தான் முன்வைக்க வேண்டும்.

ஆனால் அவர் வேறு தினத்தில் வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்தார். எனவே வேறு தினத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்ப நடத்தப்படும் என்று கூறினார்..

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் இன்று காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. (பா)

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை