தமிழர்களுக்கான உரிமை இதுவரை கிடைக்கவில்லை

போர்க் குற்றவாளிகள் உயர் பதவிகளில்

போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கான உரிமை விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள். அந்த கொள்கையின்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கிவருகின்றனர்.

அதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள். நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்துவருகிறோம்.

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் உயர் பதவிகளில் உள்ளார்கள். ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுகிறார்கள். ஆனால் நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை.

கடந்த காலங்களில் தேர்தலின் போது இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதேநேரம் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என்றார்.

பரந்தன்குறூப் நிருபர்

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை