இராதாகிருஷ்ணன் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி; டிக்கோயா பீரட் விளையாட்டு கழகம் வெற்றி

அணிக்கு ஏழு பேர் கொண்ட இராதாகிருஷ்ணன் வெற்றிக் கிண்ணத்தை டிக்கோயா பீரட் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது. இரண்டாவது இடத்தை ஹற்றன் தமிழ் யூனியன் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது.

நீண்ட நாட்களாக பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமல் இருந்த இன்ஞஸ்ரீ கீழ் பிரிவு விளையாட்டு கழகத்திற்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு இராதாகிருஷ்ணன் வெற்றிக் கிண்ணம் உதைபந்தாட்ட போட்டி கடந்த (22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான 20 இலட்சம் ரூபா நிதியை அமைச்சர் இராதாகிருஷ்ணன் கம்பெரளிய வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை ஹற்றன் உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் இன்ஞஸ்ரீ யங்லயன்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்தது.இதற்கான ஏற்பாடுகளை இன்ஞஸ்ரீ யங்லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஹற்றன் உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுக்காற்று குழு தலைவருமான எஸ்.தியாகராஜா மேற்கொண்டிருந்தார்.

போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றியிருந்தன லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு டிக்கோயா பீரட் விளையாட்டு கழகமும் ஹற்றன் தமிழ் யூனியன் விளையாட்டு கழகமும் தகுதி பெற்றிருந்தது.போட்டி முழுவதும் தனது முழுமையான திறமையை சிறப்பாக வெளிக்காட்டி வந்த ஹட்டன் தமிழ் யூனியன் விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக டிக்கோயா பீரட் விளையாட்டு கழகம் வெற்றி கொண்டது.

இறுதி வரை இரண்டு அணிகளும் கோல்களை பெற்றுக் கொள்ளாத நிலையில் போட்டியின் இறுதியில் பெனால்டி மூலம் வெற்றியாளர்களை தெரிவு செய்வது என நடுவரால் தீர்மானிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி முறை வழங்கப்பட்டது.இதன்போது சிறப்பாக செயற்பட்ட டிக்கோயா பீரட் விளையாட்டு கழக வீரர்கள் 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது ஹற்றன் உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர் விபுல சில்வா அவருடைய நீண்ட கால சேவையை பாராட்டி கௌரவிக்கபட்டதுடன் முன்னால் வீரர்கள் 25 பேரும் கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதன் இன்னுமொரு போட்டி மிக விரைவில் டிலரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இன்ஞஸ்ரீ யங்லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஹற்றன் உதைபந்தாட்ட சங்கத்தின் ஒழுக்காற்று குழு தலைவருமான எஸ்.தியாகராஜா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை