​ேவல்வத்தை தேயிலை தொழிலாளர்களின் நிதி அறிவை மேம்படுத்திய கொமர்ஷல் வங்கி

 இரத்தினபுரி வேவல்வத்தை பகுதியில் உள்ள ஒரு தொகுதி தேயிலைகொழுந்து விநியோகிப்பவர்கள் மத்தியில் நிதி அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை கொமர்ஷல் வங்கி நடத்தியது. இலங்கை மத்திய வங்கியின் உதவியோடு இந்தச் செயற்திட்டம் அமுல் செய்யப்பட்டது.

வங்கி இது சம்பந்தமாக தொடராக நடத்தி வரும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இது இடம்பெற்றது. நுண் தொழில் முயற்சியாளர்களுக்கும் தேயிலைக் கொழுந்து விநியோகஸ்தர்களுக்கும் நிதி அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் றோஹித அபேகோன் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். இவர் நிதிக் கற்கைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி சம்பந்தமான அனுபவம் மிக்க ஒரு பேச்சாளராவார்.

கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கிப் பிரிவு-சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி உதவிப் பொது முகாமையாளர் திலக்ஷன் ஹெட்டிஆரச்சி, ஊவா சப்பிரகமுவ பிரதேச பிராந்திய முகாமையாளர் எல்மோ சூரியஆரச்சி, அபிவிருத்தி கடன் பிரிவு முகாமையாளர் மாலிக டி சில்வா, பின்லேஸ் குழும அலுபொல தோட்ட அத்தியட்சகர் அஸங்க மாதவன், மற்றும் கலவான, பெல்மதுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொமர்ஷல் வங்கி அண்மையில் அதன் மூன்றாவது வாகனம் மூலமான வங்கி சேவையை ஊவா சப்பிரகமுவ பிரதேசத்தில் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சேவை மூலம் நன்மை அடையும்; பிரதேசத்துக்குள் வெவல்வத்தை பகுதியும் வருவதால் அங்கு இத்தகைய நிதிக் கற்கை திட்டம் ஒன்றை அமுல் செய்வது சாலச் சிறந்ததாகவும் அமைந்தது என்று வங்கி அறிவித்துள்ளது.

கொழுந்து பறித்து விநியோகிப்பவர்களுக்கு கொமர்ஷல் வங்கி ஏற்கனவே ஹைபிரிட் கிரடிட் கார்ட் மற்றும் அடையாள அட்டை என்பனவற்றை வழங்கி உள்ளது. இவை Sony Felica NFC தொழில்நுட்பம் கொண்டவை. கொழுந்து விநியோகிப்பவர்களின் விநியோகம் பற்றிய தன்னியக்க கணக்கீட்டை மேற்கொள்ள இது உதவுகின்றது. அதற்கான கொடுப்பனவு உடனடி தரவு மாற்ற தொழில்நுட்பத்தின் மூலம் மத்திய வைப்பகத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் கொமர்ஷல் வங்கியின் அவர்களது சேமிப்புக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறுவிதமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு கடந்த எட்டு வருட காலமாக கொமர்ஷல் வங்கி விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்தி வருகின்றது. இதன் மூலம் இன்று வரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கி உதவி உள்ளது.

தமது விவசாய செயற்பாடுகளை அல்லது சிறிய அளவிலான வர்த்தக முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் என்பன தேவைப்படுகின்றவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குவதிலும், விவசாயக் கடன்கள் மற்றும் நுண் நிதி உதவிகள் மூலம் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் கொமர்ஷல் வங்கியின் 16 விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவுகளும் முக்கியமான பணியாற்றி வருகின்றன. மேலும் இந்தப் பிரிவுகள் விவசாயக் கடன்கள் மற்றும் நுண் நிதி என்பனவற்றை வழங்குவதில் அர்ப்பணத்துடன் பணியாற்றி வருகின்றன.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை