அமைதி பேச்சுவார்த்தை ரத்து: ‘அமெரிக்காவுக்கே அதிக இழப்பு’

தலிபான்

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்துச் செய்ததன் மூலம் அமெரிக்காவுக்கே அதிக இழப்பு ஏற்படும் என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடைசி தருணம் வரை அனைத்தும் சரியாகவே இடம்பெற்றதாக தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலிபான்களுடனான அமைதி உடன்படிக்கை ஒன்றை ரத்துச் செய்ததாக கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் மூலம் அறிவித்தார். தலிபான் தலைவர்களுடன் கேம்ப் டேவிட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த சந்திப்பையும் அவர் ரத்துச் செய்தார்.

அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட ஆப்கான் தலைநகர் காபுலில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றதையே டிரம்ப் இந்த முடிவுக்கு காரணமாக குறிப்பிட்டிருந்தார்.

“பேச்சுவார்த்தையை இடைநிறுத்தும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது வெளியிட்டிருக்கிறார். இது அமெரிக்காவை அன்றி வேறு எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது” என்று தலிபான் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை முடிவுக்கு கொண்டுவந்து தமது விருப்புக்கு ஏற்ப ஆப்கான் மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் வரை கடந்த 18 ஆண்டு காலமாக நீடித்த எமது போராட்டம் தொடரும்” என்றும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டார் தலைநகர் டோஹாவில் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். “அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களுடனான பேச்சுவார்த்தைகளில் நாம் பலன்பெறவிருந்ததோடு உடன்படிக்கையும் இறுதி செய்யப்பட்டிருந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டோஹாவில் இதுவரை அமெரிக்க மற்றும் தலிபான் பிரதிநிதிகள் இடையே ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

கொள்கை அளவில் இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க தலைமை பேச்சுவார்த்தையாளர் கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார்.

இதில் ஆப்கானை தீவிரவாதிகளுக்கான தளமாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு தலிபான்கள் அளிக்கும் உத்தரவாதத்திற்கு பகரமாக 20 வாரங்களுக்குள் ஆப்கானில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 5,400 ஆக குறைப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆப்கானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளன.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை