சஜித்தின் வெற்றிக்கு சகலரும் கைகோருங்கள்

சிவில்  அமைப்புகளிடம் பிரதமர் கோரிக்கை 

ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் முன்னோக்கி கொண்டுசெல்ல சிவில் அமைப்புகள் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கைகோர்க்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். பெரும்பான்மை பலமின்றி பல விடயங்களை சாதித்துள்ளதாக கூறிய அவர்,  ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வென்று விடுபட்டவற்றை பெரும்பான்மையுடன் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரினார். 

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.  

இச்சந்திப்பில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பர அமில தேரர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உட்பட பல சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர்,

சிவில் அமைப்புகளுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். அதனால் நாம் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும். சுதந்திரமாகச் செயற்பட முடியும். நாட்டில் இன்று முழுமையான ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தகாத வழியிலோ, பலவந்தமாகவோ அழுத்தங்கள் எதனையும் நாம் கொடுக்கவில்லை. நாட்டில் வெள்ளை வான்கள் இல்லை. பொலிஸார் சட்டத்தை நிலைநாட்டுகின்றனர். அவர்களுக்கு எவரும் அழுத்தம் கொடுப்பதில்லை. சுதந்திரமாக அனைவருக்கும் வாழ முடியும்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று வெளிப்படையாக காண்பிக்கப்படுகின்றன. எதனையும் மறைக்கவில்லை. சுதந்திரமான ஊடகத்துறையே இன்றுள்ளது. ஊடகங்களுக்கு எவ்வித அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் கொடுக்கப்படவில்லை. அச்சுதந்திரத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மற்றும் மனிதவுரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் சுயாதீனமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.

எம்மிடம் எத்தகைய குறைப்பாடுகள் காணப்பட்ட போதிலும் நாட்டில் சுதந்திரம் பேணப்பட்டது. எம்மை விமர்சிக்கவும் சுதந்திரமுள்ளது. அனைவரும் இலங்கையர்கள் என்பதையே நாம் ஏற்றுக்கொள்கின்றோம். மாற்று நடவடிக்கை எது?. மீண்டும் வெள்ளை வேன் கலாசாரத்தை நோக்கி நகர்வதா அல்லது முன்னோக்கி நகர்வதா என்பதில் தங்கியுள்ளது. ஆகவே, எமது வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

Mon, 09/30/2019 - 08:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை