உலக தபால் விலையை சீரமைக்க ஐ.நா தபால் ஒன்றியத்தில் இணக்கம்

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து சமரசம்

உலகளாவிய தபால் வலையமைப்புடன் தொடர்புடைய ஐ.நா நிறுவனம் அதன் தபால் கட்டணத்தில் சீர்திருத்தங்களை செய்வதற்கு ஒருமனதாக இணங்கியுள்ளது.

இந்த அமைப்பில் இருந்து விலகுவது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வந்த நிலையில் அதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்காவின் முன்மொழிவை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் கடந்த இரண்டு நாட்கள் இடம்பெற்ற உலக தபால் ஒன்றியத்தின் அவசர கூட்டத்திலேயே இந்த சமரச ஒப்பந்தம் எட்்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்கா மற்றும் பெரும் இறக்குமதி நாடுகள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் தபால்களுக்கு தமது சொந்த கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்.

சீனா போன்ற நாடுகளுக்கான சலுகை விலை அமெரிக்காவுக்கு பெரும் பாதகமாக இருப்பதாக கூறி அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறப்போவதாக முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

உள்நாட்டில் பொருட்களை வாங்குவதை விடவும் சீனாவில் இருந்து அமெரிக்க வாடிக்கையாளர்கள் பொருட்களை கொள்வனவு செய்வது மலிவானதாக மாறியிருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டது. அமெரிக்க தபால் சேவை ஆண்டுக்கு 500 மில்லியன் டொலர்களை செலவிடும் நிலையில் இது அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு நியாயமற்றதாக இருப்பதாகவும் அந்த நாடு வாதிட்டது.

145 ஆண்டுகள் பழமையான உலக தபால் ஒன்றியம் அனைவருக்கும் தபால் விலையை மலிவுடையதாக்கும் நோக்கில் சர்வதேச தபால் விலையை நிர்ணயிக்கும் அமைப்பாக செயற்படுகிறது.

193 உறுப்பு நாடுகளினது பொருளாதாரம் மற்றும் தபால் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் தபால் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொதிகளுக்கு மானிய விலை வழங்கப்படுவதோடு அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த முறையால் உலகில் பெரும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான சீனா அதிக இலாபம் ஈட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது.

இந்த சீர்திருத்த உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட உலக தபால் ஒன்றிய பணிப்பாளர் நாயகம் பிஷார் ஹுஸைன், அதிக விலை நிர்ணயிப்பது சிலருக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாக அமையும் என்று சுட்டிக்காட்டினார். இந்த மாற்றத்தை வரவேற்ற அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் தலைவரான வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, அடுத்து ஆண்டு ஜூன் மாதத்தில் தமது விலைகளை நிர்ணயிக்கப்போவதாக குறிப்பிட்டார்.

புதிய உடன்படிக்கையின்படி பெரிய அளவிலான இறக்குமதி நாடுகள் தாம் பெறும் வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளுக்கு 2021 ஜனவரி தொடக்க தமது சொந்த விலை நிர்ணயத்தை அமுல்படுத்த முடியும்.

75,000 தொன்களுக்கு அதிக தபால்களை ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்யும் நாடுகள் 2020 ஜூலை தொடக்கம் தமது சொந்த விலை நிர்ணயத்தை அமுல்படுத்த முடியும்.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை