யாழ்ப்பாணத்தில் நாளை கண்காட்சி ஆரம்பம்

10,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் சிறப்புத் திட்டம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது.

இந்த கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 90 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார். தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கருகில் எடுத்துச் செல்வதை நோக்காகக் கொண்டும் இக்கண்காட்சி செப்டம்பர் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ். கோட்டை முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கின் தனித்துவமான பல்வேறு துறைசார் தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை வலுப்படுத்தவும் புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதும் இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும் எனவும் நிதிமைச்சுதெரிவித்தது.

யாழ். மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா துறைகளுக்கு முன்னுரிமையளித்து, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதும் இந்த செயற் திட்டத்தின் நோக்கமாகும்.

தொழில்முயற்சிக்கான எதிர்பார்ப்புகளுடனான இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து அவர்களுக்கு சேவைகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், இந்தக் கண்காட்சித் தளம் ஏழு பிரிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய 07 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ், சிறு வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதலும் இங்கு இடம்பெறும்.

காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தினமும் நாட்டின் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதே வேளை,இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 55 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கென 90 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை