அமைச்சர் ருவனின் செயற்பாடே ரூபவாஹினி உள்வாங்க காரணம்

சு.க குற்றச்சாட்டு

அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் தன்னிச்சையான நியமனங்களால் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாகவே அதனை பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்தது. சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி.மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கும்போது ஜனாதிபதி செயலகத்தில் இயங்கும் விசேட குழுவின் ஆலோசனைக்கு அமையவே நியமிக்க முடியும். சத்தியாங்கனி என்பவர் மேற்படி குழுவின் தீர்மானத்துக்கமையவே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் உள்ள கூட்டுத்தாபன தலைவர்களும் இக்குழுவின் தீர்மானத்துக்கமையவே நியமிக்கப்பட்டிருந்தனர். அதுதான் சட்டரீதியானது. அமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் எவ்வித பிரச்சினைகளும் இருக்கவில்லை. எனினும், ருவன் விஜேவர்தன அதற்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னரே பிரச்சினைகள் ஏற்பட்டன.

ஆரம்பத்தில் சஞ்ஜீவ விஜேகுணவர்தன என்பவரை தலைவராக நியமிக்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

அவர் ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்யும் வர்த்தகராவார். அவர் எவ்வாறு இந்தப் பதவிக்கு பொறுத்தமானவராக இருப்பார்? அதற்கான கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் குழு நிராகரித்ததுடன், சத்தியாங்கனியை கூட்டுத்தாபன தலைவராக நியமித்தது.

இரண்டாவது முறையாக சத்தியாங்கனியையே ஜனாதிபதி செயலக குழு நியமித்தது. அதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், மீண்டும் ஒருவரை (கெலும்) ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமித்தார்.

ஜனாதிபதி செயலக குழுவின் எவ்வித அனுமதியுமின்றியே அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுந்தன. ஊடகத்துறைக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதியே உள்ளார். அனைத்துக் காரணிகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தியே ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை