மொட்டு சின்னத்தை மாற்றினால் கூட்டணி சாத்தியம்

சு.க. திட்டவட்டம்

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்ந்து அக்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதானால் கட்டாயம் மொட்டு சின்னத்தை மாற்ற வேண்டும் என சு.க மீண்டும் வலியுறுத்தியது.

மொட்டு சின்னத்திற்கு சு.க ஆதரவாளர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் சு.கவுக்கு ஜனாதிபதி பதவியோ பிரதமர் பதவியோ கூட ஒதுக்கப்படாத நிலையில் இந்த கோரிக்கையையாவது பொதுஜன பெரமுன நிறவேற்ற வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது.

ல.சு.க தலைமையகத்தில் ​நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதன் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து காணப்படுகிறது. வெற்றிபெறுவதற்கான அடித்தளத்தை இட எமது தரப்பில் சகல வித அர்ப்பணிப்புகளும் செய்யப்பட்டன. பொதுஜன பெரமுன தமது வேட்பாளரையும் எம்முடன் கலந்தாலேசிக்காது தெரிவு செய்த போதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

எமக்கிடையிலான பேச்சில் பல கொள்கை ரீதியான உடன்பாடுகள் எட்டப்பட்டன. மொட்டு சின்னத்தை மாற்றி பொதுவான சின்னத்தில் போட்டியிட ​வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும். கடந்த காலத்தில் கதிரை சின்னத்தில் பல வெற்றிகளை பெற்றிருந்தும் கூட நாம் ஜே.வி.பி அடங்கலான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வெற்றிலை சின்னத்தை தெரிவு செய்தோம்.

நாம் சின்னம் தொடர்பான பிரச்சினையில் தொங்கி பேச்சுக்களை குழுப்பவில்லை. எதிர்வரும் தினங்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்பாடு எட்டப்படும். பேச்சுவார்த்தை தோற்றால் எமக்கு மாற்று வழிகள் இருக்கின்றன. எமக்கு இடது சாரி சக்திகளுடன் இணைந்து பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி செயற்பட முடியும்.

ஐ.தே.க எதிர்ப்பு மற்றும் ராஜபக்‌ஷ அலைக்கு அப்பாற்பட்ட தரப்பிற்கு மக்களின் ஆதரவு இருக்கிறது .ஜனாநாயகத்தை விரும்பும் மோசடிக்கு எதிரான சக்திளை இணைத்து செயற்பட முடியும். சு.க சார்பில் வேட்பாளரை இறக்கவும் கூட வாய்ப்பிருக்கிறது. எமது ஜனாதிபதிக்கு மோசடி குற்றச்சாட்டுகள் கிடையாது. எமக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. அவரை சு.க வேட்பாளராக களமிறக்க முடியும்.

நாம் ஜே.வி.பி மற்றும் கட்சிகள், சிவில் அமைப்புகள் ,தொழில் சார் நிபுணர்கள் போன்றோருடனும் எதிர்காலத்தில் பேச இருக்கிறோம். சஜித் பிரேமதாஸவுடன் பேசவேண்டிய தேவை எமக்கு இல்லை.

அவர் பிரிந்து வருவாரானால் அவருடன் பேசத் தயாராக இருக்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை