கென்யாவில் பாடசாலை இடிந்து ஏழு சிறுவர்கள் பலி: பலர் காயம்

கென்ய தலைநகர் நைரோபியில் பாலர் பாடசாலை கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஏழு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மரப்பலகையால் கட்டப்பட்ட அந்த வகுப்பறை கட்டடம் நேற்று பாடசாலை தொடங்கி சில நிமிடங்களில் சரிந்தது. இதில் காயமடைந்த பலரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“ஏழு பேர் உயிரிழந்து 57 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை இதுவரை உறுதி செய்ய முடிகிறது” என்று அரசு சார்பில் பேசவல்ல ஒருவர் சம்பவ இடத்தில் வைத்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இடிபாடுகளுக்குள் பலரும் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்தப் பாடசாலையில் 14 வயதுக்கு குறைவான 800 மாணவர்கள் வரை கல்வி கற்பதாக கூறப்படுகிறது.

அருகில் இருக்கும் கழிவு நீர் குழாயே இந்த இடிபாட்டுக்கு காரணம் என்று பாடசாலையின் பணிப்பாளர் மோசஸ் டிரன்கு குற்றம்சாட்டியுள்ளார். அந்தக் கழிவு நீர் கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலவீனப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கென்ய நேரப்படி நேற்றுக்காலை 7.00 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதோடு அதனை அடுத்து மாணவர்கள் உடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் பற்றி அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை