ஆட்சியமைக்கும் அரசில் கூட்டமைப்பு அமைச்சு பதவி வகிக்க வேண்டும்

தமிழ் மக்களை வாழவைக்க மாற்று வழி இதுவே

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வாக்களிக்கும் தமிழ் மக்களை மறந்து செயற்படாமல் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தில் அமைச்சுப்பதவி ஏற்று தமிழ்மக்களை வாழவைக்க வேண்டும் என கிழக்கின் இளைஞர் முன்னணித் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.  

இதனை உணர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் செயற்பட்டால்தான் எமது தமிழ்ச் சமூகத்தின் இருப்பைத் தக்கவைத்து கொள்ள முடியும் என்றார். 

சமகால அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக அவரிடம் நேற்று (20) கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

இன்று எமது தமிழ் இளைஞர்கள், யுவதிகள் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி தொடர்பாக என்னிடம் அன்றாடம் கதைக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் பதில் என்னெவென்றால், மட்டக்களப்பிலும், கிழக்கு மாகாணத்திலும் இயலுமானவரை எமது மண்ணை சேர்ந்த திறமையானவர்களை வாக்களித்து அமைச்சராக்குங்கள்.நாம் கைப்பற்றும் அமைச்சின் மூலம் வேலைவாய்ப்பு, அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள்,  யுவதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் செயலில்தான் எமது இருப்பு உள்ளது. வெறும் பேச்சில் அல்ல. இதனை நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இதனை இன்னும் தமிழ் சமூகம் உணர்ந்து செயற்படாமல் போனால் தமிழர்களின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்பன கேள்விக்குறியாகி மாற்றுச் சமூகத்திடம் கையேந்தும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுத்தான் தீர்த்துக்கொள்ளலாம். இதனை எல்லாத் தமிழர்களும் உணர்ந்து செயற்படும் காலம் வந்துவிட்டது. 

சகோதர முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியமைக்கும் அரசாங்கத்துடன் இணைந்து பல அமைச்சுக்களை கையகப்படுத்தி தன்னுடைய முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், தேவைகள், வேலைவாய்ப்புக்கள், அபிவிருத்தியை செய்து தமது முஸ்லிம் மக்களின் இன்னல்களை தீர்க்கின்றார்கள். சகோதர முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தமது சமூகம் பற்றி சிந்தனை இருக்கின்றது. 

சமூகப் பற்றும், எதிர்காலத் திட்டமிடலும் நம்முடைய தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடம் அறவே இல்லை. கடந்த முப்பது வருட காலமாக தமிழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய நம்முடைய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ன செய்துள்ளார்கள். உணர்ச்சி அரசியலை விட ஒன்றுமில்லை.

தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அனுப்பும் ஓட்டைப்பானை அரசியல் தமிழ் மக்களுக்கு ஒன்றும் தராது. அதனை உணர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவியை ஏற்று எதிர்காலத்தில் சிறப்பாக செயற்பட்டால்தான் எமது தமிழ் சமூகத்தின் இருப்பையும், நில, நிருவாக, அதிகாரத்தையும் மற்றும் வேலைவாய்ப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.   

வெல்லாவெளி தினகரன் நிருபர் 

Sat, 09/21/2019 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை