பௌத்தர்களுக்கும் இந்துகளுக்குமிடையே ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும்

இந்து, பௌத்தம் என்ற இரு மதங்களுக்கிடையில் தொன்று தொட்டு நல்லுறவுகளும், ஒற்றுமையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்துக்கள் புத்தரையும், பௌத்தர்கள் இந்து தெய்வங்களையும் வணங்கி வரும் நிலையினைக் காண்கின்றோம். பரஸ்பர நல்லுறவுகளும் ஒற்றுமையும், புரிந்துணர்வுகளும் மென்மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று, இந்து சமய அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.

பதுளை நாரங்கலை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய சுவாமி சிலைகளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில்; பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் எமது நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லுறவுகளும் சகவாழ்வும் ஒற்றுமையும் ஐக்கியமும் மேலோங்க வேண்டும். இதனை அனைத்து இனங்களும் புரிந்து செயல்படல் வேண்டும்.

ஆதியும் அந்தமும் இல்லாத மதமே இந்து மதமாகும். உலகிலேயே மூத்த மதமாக இருந்து வருவதும் எம் மதமே.

இது எமக்கு பெருமை தரக்கூடியதொன்றாகும். இத்தகைய மதம் சார்ந்தவர்களாக பாக்கியம் செய்தவர்களாக நாம் இருந்து வருகின்றோம். இந்நிலையில் எமது சமூகத்தின் வறுமை மற்றும் அறிமையாமைகளைப் பயன்படுத்தி மக்களை மதம் மாற்றும் செயல்பாடுகளில் சிலர் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது விடயத்தில் எம்மவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது மதத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆலயங்கள் சிறப்புற இயங்க வேண்டும். நாரங்கலையில் இவ்விரு ஆலயங்களைப் பொறுத்தவரை ஆகம விதிப்படியும் நேர்த்தியான முறையிலும் ஆலயங்களும் தெய்வச் சிலைகளும் சிற்பங்களும் அமைந்துள்ளன. இவற்றினைப் பார்க்கும் போது மனம் பூரிப்படைகின்றது.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பது முதுமொழி. இம் முதுமொழியை எம்மவர்கள் பின்பற்றி வருகின்றனர். இதனை முன்னிலைப்படுத்தி இந்து மக்கள் பலவீனமானவர்கள் என்று எவரும் எடை போட்டு விடக்கூடாது. அனைத்து மதத்தினருடனும்இ இனத்தவர்களோடும்; எம்மவர்கள் பரஸ்பரம் நல்லுறவுகளைப் பேணியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடாசாலைகள் செயல்படல் வேண்டும். அறநெறிப் பாடசாலைகளுக்கு தத்தமது பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும்.

எமது மதத்தின் மகத்துவம் பாரம்பரியம் விழுமியங்கள் பாதுக்கப்படல் வேண்டியது அவசியமாகும். இதனை எம்மவர்கள் தத்தமது கடமைகளாகக் கருத வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

பதுளை தினகரன் விசேட நிருபர்

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை