சகலருக்கும் சமத்துவம், சுதந்திரம் வழங்குவதே உண்மை ஜனநாயகம்

உலக ஜனநாயக தினம் நாளை

ஜனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றுக்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாகவும் ஐ.நா இந்நடவடிக்கையை மேற்கொண்டது.

இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்தன.மேலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல்,பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆகுமென்று பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நாவின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐ.நா கேட்டுள்ளது.

உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்றாகும். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கும்."மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரைவிலக்கணப்படுத்தினார். அரிஸ்​ேடாட்டில் "மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி" என்று கூறினார்.

பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துகளைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது

ஏனைய கட்சிகளுடன் கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும்.மக்களின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஆகவே இங்கு மக்கள் பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகர்.

கோட்பாட்டு ரீதியாக இந்த விளக்கம் அழகாகக் காணப்பட்டாலும் கூட, ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவது பொதுவாக ஜனநாயக நாடுகளில் காணக் கூடிய நடைமுறை நிலைமையாகும்.

உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் தோன்றி மறைந்து, அதன் பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி, 20 ஆம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது.

இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் பழங்கால கிரேக்க,ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க சுதந்திரப் போர், பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவற்றால் மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.

ஜனநாயக ஆட்சியில் முக்கிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை சமத்துவம், சுதந்திரம் என்பனவாகும்.இங்கு சமத்துவம் எனும் போது இது விரிவான விளக்கப்பரப்பைக் கொண்ட போதிலும் கூட சுருக்கமாக 'உரிமைகளைப் பொறுத்தமட்டில் எல்லோரும் சமம்' என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'சகலரும் சம உரிமைகளுடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறோம்'.

1789இல் பிரான்சின் உரிமைப் பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது. 'மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை சம உரிமைகளை உடையவன்.

மக்களாட்சியில் குறிப்பிட்ட வர்க்கமோ அல்லது வர்க்கங்களோ முதன்மையானதாக கருதப்படுவதில்லை. அதேநேரத்தில், மக்களாட்சி நிர்வாகத்தில் பெரும்பாலானோரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தாக வேண்டும். ஜனநாயகத்தில் இறுதியான அதிகாரம் மக்களிடமே உள்ளது.

ஒரு மனிதன், சட்டத்துக்கு உட்பட்டு, அவனது வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கருதுபவற்றை மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி செய்வதற்கான உரிமை சுதந்திரமாகும். இதில் அரசியல், பொருளாதார, சமய சுதந்திரம் ஆகியவை அடங்கும். மக்களாட்சியில் கருத்துச்

சுதந்திரம் ஒவ்வொருவக்கும் உண்டு என்பதால் சகிப்புத் தன்மையும் அவசியம். சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் தோற்றுவிடும். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம்.-

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை