செம்மலை விவகாரம் சட்டத்தரணிகள் நான்காவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு

முல்லைத்தீவில் நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி நீதிமன்றை அவமதித்து சர்ச்சைக்குரிய செம்மலை விஹாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு சட்டத்தரணிகள் மேற்கொண்டு வரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் நான்காவது நாளாக நேற்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டு நீதிமன்றம் அவமதிக்கப்பட்டமை தொடர்பாகவும், நீதிமன்ற உத்தரவை காண்பிக்கச் சென்ற சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சட்ட மாஅதிபர் வழக்கு தாக்கல் செய்வதற்கு நேற்றைய தினம் வரை கால அவகாசம் வழங்கியிருந்தனர். இவ்வாறான நிலையில் சட்ட மாஅதிபர் வழக்கு தாக்கல் செய்யாவிட்டால் போராட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக சிந்திக்கப்படும் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற செயற்பாடுகளில் பங்குபெற்றியிருக்கவில்லை. இதனால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்துடன் நீதிமன்றுக்கு சென்ற வழக்கு தொடர்பானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பங்குபற்றியிருந்தனர்.

மாங்குளம் குறூப் நிருபர்

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை