தேர்தல் திகதியை அறிவித்த பின்னரே ஐ.தே.மு வேட்பாளரை அறிவிக்கும்

 தமிழர்களுக்கு வாழும் உரிமை முழுமையாக கிடைத்துள்ளது

சென்னையில் அமைச்சர் மனோ தெரிவிப்பு

தூத்துக்குடி- கொழும்பு, தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சென்னை சென்றுள்ள அமைச்சர் மனோ கணேசன் நேற்று நிருபர்களிடம் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 23 அல்லது நவ. 29 இல் நடைபெற வாய்ப்புள்ளது.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை தலைமை தேர்தல் செயலகம் விரைவில் அறிவிக்கும்.

இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை அறிவிக்கும்.

 

.2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் வாழும்பகுதியில் எந்தக் கெடுபிடிகளும் இடம்பெற வில்லை. அங்குள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு பணிகளை மேற் கொண்டு வருகிறோம். தமிழர்களின் கட்சிகள் ஒற்றுமையுடன் உள்ளன.

இராணுவ முகாம்களும் படிப்படியாக அகற்றப்பட்டு பல்வேறு நலத்திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை- இந்தியாவுடனான நட்பு முக்கியமானது. கொழும்பு துறைமுகத்துக்கு 70 சதவீத வருவாய் இந்தியாவுக்கான சரக்கு கொள்கலன்களை கையாளுவதன் மூலம் கிடைக்கிறது. தூத்துக்குடி - கொழும்பு, தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும். இலங்கையில் சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறைத்துள்ளோம்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி உள்ளோம். இங்கிருந்து இந்தியாவுக்கு விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பமாகும். போருக்குப் பிறகு தமிழர்களுக்கு 100 சதவீதம் அவர்களுடைய நிலங்கள், உரிமைகள் கிடைத்து விட்டதாக் கூற முடியாது. ஆனால் 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது நல்லமுன்னேற்றம் கிடைத்துள்ளது. போரின்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். ஆனால் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு எவரும் காணாமல் போகவில்லை என்றார்.

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை