அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரியிலிருந்து அதிகரிப்பு

2020இல் 50% எஞ்சிய தொகை 2021 இல்

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 2020 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அவர்களின் 2015 ஆம் ஆண்டு ஆரம்ப சம்பளம் முதல் 2020 வரை பெற்றுவந்த 107வீதமான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாகவே இந்த அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. ​

நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத்

தீர்ப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் 2015 ஆம் ஆண்டு ஆரம்ப சம்பளத்தின் 107 சதவீதத்தை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் 50 சதவீதத்தை 2020 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதியன்று வழங்குவதற்கும் எஞ்சிய தொகையை 2021 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதியன்று வழங்குவதற்கும் ஆணைக்குழு தீர்மானித்தது.

இந்நிலையிலேயே 2020 ஜுலை வழங்கப்படவிருந்த சம்பள அதிகரிப்பை 2020 ஜனவரியில் வழங்குவதற்கு நேற்றுமுன்தினம் கூடிய அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி அரசாங்க ஊழியர்களின் 2015 ஆம் ஆண்டுக்கான சம்பளத்தின் 50 சதவீதம் 2020 ஜனவரியிலும் எஞ்சிய தொகை 2021 ஜனவரியிலும் வழங்கப்படும்.

இப் புதிய சம்பள அதிகரிப்புக்கமைய நிறைவேற்று அதிகாரியொருவரினது அடிப்படைச் சம்பளம் 9 ஆயிரத்து 587 ரூபாயாலும் அமைச்சு செயலாளர் ஒருவருடைய சம்பளம் 23 ஆயிரத்து 975 ரூபாயாலும் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று அரசாங்க சேவையில் குறைந்த மட்டத்திலுள்ள அதிகாரிகளின் சம்பளம் 3 ஆயிரம் ரூபாயாலும் உதவி முகாமையாளர்களின் சம்பளம் 4 ஆயிரத்து 320 ரூபாயாலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரது சம்பளம் 5 ஆயிரத்து 40 ரூபாயாலும் அதிகரிக்கப்படும்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எஸ்.ரணுக்கே தலைமையிலான அரசாங்க சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான குழுவின் சிபாரிசுக்கமைய அமைச்சரவையில் மேற்படி சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை