உயிர்வாழ சாத்தியம் கொண்ட கிரகத்தில் முதல்முறையாக நீர் இருப்பது கண்டுபிடிப்பு

தொலைதூர நட்சத்திரம் ஒன்றில் உயிர்வாழ சாத்தியம் கொண்ட வலயத்திற்குள் வலம்வரும் கிரகம் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதை வானியலாளர்கள் முதல்முறை கண்டுபிடித்துள்ளனர்.

வேற்று உயிரினங்கள் இருப்பதை தேடுவதற்கு சாதகமான கே2–18பி என்ற உலகத்திலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புதிய விண்வெளி தொலைநோக்கி கே2–18பியின் வளிமண்டலத்தில் உயிரினங்களை உருவாக்கும் வாயுக்கள் இருப்பதை உறுதி செய்ய முடியுமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நேச்சர் அஸ்ட்ரோனமி என்ற விஞ்ஞான சஞ்சிகையில் இது பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கிரகம் ஒன்றின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கு தேவையான வெப்பநிலையை கொண்ட பகுதியில் அந்த கிரகம் தனது நட்சத்திரத்தை வலம் வரும் பகுதியே உயிர்வாழ சாத்தியம் கொண்ட வலயம் என அழைக்கப்படுகிறது.

கே2–18பி கிரகமானது பூமியில் இருந்து சுமார் 650 மில்லியன் மில்லியன் மைல்களுக்கு அப்பால் 111 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எனினும் 2020களில் அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கி நிறுவப்படும் வரை அந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கு காத்திருக்க வேண்டி வரும்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர் வாழ்க்கை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு மிகப்பொருத்தமான கிரகம் இதுதான் என்று, நேச்சர் அஸ்ட்ரோனமி சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கியோவன்னா டினெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தக் கிரகத்தை ஹப்பிள் வானியல் தொலைநோக்கியின் நிறமாலைமானி மூலம் ஆராய்ந்து, நீராவி இருப்பதை மிகவும் துல்லியமாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேபோன்று கே2–18பி கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் இருப்பதற்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

நைட்ரஜன், மீத்தேன் போன்றவையும் இருக்கலாம் என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. வளிமண்டலத்தில் மேகங்கள் எந்த அளவுக்கு உள்ளன மற்றும் நீரின் அளவு போன்ற விபரங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட உள்ளது.

உயிர் வாழ்க்கை என்பது நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதால், பிராண வாயு எனக் குறிப்பிடப்படும் ஒட்சிசனை கொண்டிருக்கும் நீரை அடிப்படையாக வைத்தே, வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை தேட முடியும் என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை