காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்பிய சீனாவுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் எழுப்பிய சீனாவுக்கு இந்த முயற்சியை நிறுத்திக்கொள்ளுங்கள் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஓகஸ்ட் 5ந் திகதி ரத்துசெய்தது.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி மேற்கொண்டது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம், இதில் 3வது நாடு தலையிடுவதை ஏற்கமுடியாது என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்தப் பிரச்சினையை நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் எழுப்பியது.

சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி இதுகுறித்து பேசியதாவது:– 

கடந்தகாலங்களில் இருந்து தொடர்ந்துவரும் காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படியும், இருநாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் சுமுகமாகவும் சரியான முறையிலும் தீர்க்கப்பட வேண்டும்.

அதன் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தற்போது உள்ள நிலையில் இருந்து மாற்றுவது தொடர்பாக ஒருதலைப்பட்ச முடிவு எதையும் எடுக்கக்கூடாது. 

இந்த பிரச்சினை திறம்பட நிர்வகிக்கப்பட வேண்டும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மீண்டும் புதுப்பிக்கப்படுவதுடன் அமைதிநிலை திரும்ப வேண்டும் என இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் அண்டை நாடு என்றவகையில் சீனா விரும்புகிறது என அவர் பேசினார். 

இதற்கு இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:– 

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதும், அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முற்றிலும் எங்கள் உள்நாட்டு விவகாரம் என்பதும் சீனாவுக்கு நன்றாகவே தெரியும்.

மற்ற நாடுகள் இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா–பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைப்பதற்காக, அங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சட்டவிரோதமாக்கும் முயற்சி மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என அவர் கூறினார்.

Mon, 09/30/2019 - 13:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை