பல்கலைக்கழக நூலக சர்வதேச மாநாடு வெற்றிகரமாக நிறைவு

இலங்கை பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, மவுண்ட் லவினியா ஹோட்டலில் மிகப்பிரமாண்டமான ஒழுங்கமைப்பில் 10ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு புதன்கிழமை (18) நடைபெற்றது. ஏறக்குறைய 160 பங்குபற்றுனர்களுடனும், பல சர்வதேச நூலகத்தயாரிப்பு நிறுவனங்களின் நிதி அனுசரணையுடனும் பலரது பாராட்டுதல்களுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

களனிப் பல்கலைக்கழக மாணவிகளின் கலாசார நடனத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் தலைவர் கலாநிதி சமிந்த ஜயசுந்தர வரவேற்புரை நிகழ்த்தினார். சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கான தலைவர் டபிளியு. ஜே. ஜெயராஜ் நிகழ்த்திய மாநாட்டு அறிமுக உரையில், சமகால சந்ததியினரது சிந்தனைப் போக்கிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குமேற்ப சமாந்தர ரீதியில் நூலகங்களின் உருமாற்றத்தன்மைபற்றி ஆய்வு ரீதியில் வெளிக் கொணரப்படவேண்டிய தேவை பற்றி விளக்கினார்.

இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர் ஸ்தானிகர் றொபீனா பீ. மார்க்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இம்மாநாட்டின் ஆதார சுருதி உரைகளை களனிப் பல்கலைக்கழக ஆங்கில சிரேஷ்ட பேராசிரியை மைத்திரி விக்கிமசிங்கவும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு

பல்கலைக்கழக உடற்கூற்றியல் சிரேஷ்ட பேராசிரியர் சுசிரித் மெண்டிஸும் நிகழ்த்தினர்.

தகவல் யுகத்தினுள் நூலகங்களின்றிய நிலையில் மனிதன் தனது இருப்பை உறுதி செய்யமுடியாதென்பதையும் நூலகங்கள் வாசகர்களைக் கவர வேண்டிய தேவையிருப்பதையும் பேராசிரியர் சுசிரித மெண்டிஸ் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்க தனதுரையில், நூலகத் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து சிலாகித்தும், ஆண் பெண் சகலரது உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவரவர் தகவல் விடயங்களை தேவையுணர்ந்து பரிமாற்றவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அழகாக எடுத்துரைத்தார். பிரதம அதிதி றொபீனா மார்க்ஸ் தனதுரையில் நூலகர்களும் நூலகங்களும் இலங்கையில் உன்னத நிலையில் வளர்ந்துவருவதுகுறித்து பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை