காணாமற் போனோரின் குடும்பங்களுக்கு நவம்பர் முதல் 6 ஆயிரம் ரூபா

காணாமற் போனோரின் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபா இடைக்கால மாதாந்த கொடுப்பனவு எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவு யுத்தத்தின்போது காணாமற்போன ஆயுதப் படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கும் கிடைக்கும்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது பிரதி அமைச்சர் மங்கள சமரவீர இதற்கான திட்டத்தை முன்வைத்தார். இந்த இடைக்கால மாதாந்த கொடுப்பனவு யோசனைக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காணாமற்போனோர் இல்லாமை காரணமாக அவர்களது குடும்பங்களுக்கு பாரதூரமான பொருளாதார கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பலநேரங்களில் காணாமற் போனோரே அக்குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் இவ்வாறு சிரமங்களுக்குள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு காணாமற் போனோர் தொடர்பான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று காணாமற் போனோர் அலுவலகம் அதன் 2018 ஓகஸ்ட் மாத இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைகளையே நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019க்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியிருந்தார்.

இதற்கான பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காணாமற் போனவர் தொடர்பான சான்றிதழை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை அவர்களது வங்கியில் வைப்பிலிடப்படும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இழப்பீட்டு அலுவலகம் நஷ்டஈடு மற்றும் ஏனைய இழப்பீடுகளை வழங்கும் வகையில் மேற்படி இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும்.

சட்ட ரீதியான இழப்பீடுகள் கிடைக்கும் உரிமை மற்றும் நடைமுறைகளுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவு எந்த விதத்திலும் தடையாக அமையாது.

Sat, 09/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை