52 கொக்கைன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண் கைது

52 கொக்கைன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண் கைது-Brazil Women Came from Dubai Swallow Cocaine Capsules Arrested at BIA

கொக்கைன் உருண்டைகளை விழுங்கி இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (28) காலை 10.35 மணியளவில் கட்டாரின், டோஹாவிலிருந்து வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து சந்தேகத்தின் பேரில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்ப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 கொக்கைன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண் கைது-Brazil Women Came from Dubai Swallow Cocaine Capsules Arrested at BIA

சந்தேகநபரை ஸ்கேன் செய்தபோது, ​​அவரது அடிவயிற்றில் ஏதோ பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் குறித்த பெண், நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மேற்கொண்ட சோதனையில், குறித்த நபர் வாய் வழியாக விழுங்கிய பொதி செய்யப்பட்ட கொக்கைன் உருண்டைகள் (capsules) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள பதில் ஊடகப் பேச்சாளர் சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் இதுவரை 52 கொக்கைன் உருண்டைகளை குத வழியாக வெளியேற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கட்டம் கட்டமாக இவ்வாறு கொக்கைன் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் "புளோரென்சியோ டோஸ் சண்டோஸ் வால்ட்ஜ்னியா" (Florencio Dos Santos Valdjnea) எனும் பெயருடடைய பிரேசில் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (29) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுங்கத் திணைக்கள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் பிரிவின் கட்டுநாயக்க பிரிவு ஆகியன இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லால் வீரகோன் தெரிவித்தார்.

சந்தேகநபரையும், மீட்கப்பட்ட கொக்கைன் உருண்டைகளையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sun, 09/29/2019 - 12:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை