பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 25ஆக உயர்வு

பாகிஸ்தான் காஷ்மிர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதில் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நிர்வாக காஷ்மிரில் மிர்புர் நகருக்கு நெருக்கமாக மையம்கொண்டிருந்த இந்த பூகம்பம் 5.8 அளவில் பதிவானது.

இதனால் வீடுகள், கடைகள் தரைமட்டமானதோடு ஜெலும் மற்றும் மிர்புர் நகரங்களுக்கு இடையிலான வீதி பிளவுபட்டு காணப்படுகிறது. கிராமங்களில் பழைய வீடுகள் சரிந்ததாலேயே அதிக சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் சர்தார் குல்பராஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.

அந்நகரின் இரு முக்கிய வீதிகளில் குறைந்தது 1.2 மீற்றர் ஆழமான வெடிப்புகள் காணப்பட்டன. சில வெடிப்புகளில் கார்கள் சிக்கியிருப்பதையும் பஸ், லொரிகள் வீதியோரமாக கிடப்பதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்கள் காட்டின.

மிர்புரின் புறநகரிலுள்ள சஹன்கிக்ரி கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 400 வீடுகள் சேதமடைந்ததாகக் கிராமவாசிகள் தெரிவித்தனர். அதனையடுத்து, மிர்பூரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

மீட்புப் பணிக் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன. சில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தின் முழுப் பாதிப்புகளும் உடனடியாகத் தெரியவில்லை. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் 2005இல் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தனர்.

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை