ஆப்கான் தேர்தல் பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி பங்கேற்ற தேர்தல் பேரணி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் 24 பேர் கொல்லப்பட்டு மேலும் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

பர்வான் மாகாண தலைநகர் சரிகாரில் கானி உரையாற்றிக்கொண்டிருந்தபோது நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

“உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதோடு பொதுமக்களே அதிகமாக உள்ளனர். அம்புலன்ஸ்கள் தொடர்ந்து செயற்படுகின்றன. உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்று மாகாண மருத்தவமனை தலைவர் அப்துல் காசிம் சங்கின் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரியே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்ளுர் அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவரது உதவியாளர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்து சற்று நேரத்தில் தலைநகர் காபுலிலும் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றதோடு அதற்கும் தலிபான்கள் பொறுப்பேற்றனர். அமைச்சுக் கட்டடங்கள் மற்றும் நேட்டோ வளாகம் இருக்கும் பகுதியிலேயே இந்த குண்டு வெடித்துள்ளது.

வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவது குறித்து தலிபான் அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கானி தனது இரண்டாவது ஐந்து ஆண்டு தவணைக்காக போட்டியிடுகிறார்.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை