23,000 குடும்பங்கள் பாதிப்பு

5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மழை, வெள்ளம், மண்சரிவு

அவசர நிவாரணங்களுக்கு ரூ.12 மில். ஒதுக்கீடு

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையால் 23,000 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 80,007 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் 3696 குடும்பங்களைச் சேர்ந்த 15,000 பேர் 42 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவிக்கிறது.

அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் 12 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. இதேவேளை மண் சரிவு அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளிலுள்ள மக்களை அங்கிருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய எட்டு மாவட்டங்களிலுள்ள 61 பிரதேச செயலகப் பிரிவு மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு

குறிப்பிட்டது.

நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ரன்ஞித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு முதற்கட்டமாக 12 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இதேவேளை பல மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு இடங்களில் 10 ஆயிரம் குடும்பங்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்குள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களில் வீடுகள் வழங்கப்படும். வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன் மரணமடைந்தோருக்கு இரண்டரை இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. வீடுகளைத் திருத்துவதற்கு ஏற்கனவே 300 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீடுகளின் பாதிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு 25 இலட்சம் ரூபா வரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வீடு கட்டுவதற்கு 12 இலட்சம் ரூபாவும், காணி அல்லது இடங்களுக்கான நட்ட ஈடாக 4 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும். இதேவேளை தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்கள் மற்றும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக விசேட செயற்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கென 110 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் இதன் மூலம் புனரமைக்கப்படும்.

இதற்கிணங்க தற்போது 1,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை